
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து 1000 பேரை குணப்படுத்தியுள்ளதாக பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பதஞ்சலி நிறுவனத்தின் துணை நிறுவனரான ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆஜ் தக் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில், “சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதலாகவே மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பதஞ்சலி இறங்கிவிட்டது.
எங்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு துறையும் மருந்து கண்டுபிடிக்க அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்தன.வேதங்களை கவனமாக படித்து கொரோனாவுக்கான மருந்தை உருவாக்கியிருக்கிறோம்.
வேதங்களில் கூறப்பட்டிருக்கும் சூத்திரங்களை கடைப்பிடித்து முழுக்க முழுக்க ஆயுர்வேத பொருட்களை கொண்டு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இம்மருந்தை உருவாக்குவதற்காக பதஞ்சலி விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் உழைத்தனர். தற்போது அரசு விதிமுறைப்படி பதஞ்சலி மருந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
பதஞ்சலியின் கொரோனா மருந்து ஏற்கனவே சுமார் 1000 பேரை குணப்படுத்தியிருக்கிறது. நாடு முழுவதும் பல்வேறு கொரோனா நோயாளிகளுக்கு பதஞ்சலி மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 80% பேர் விரைவில் குணமடைந்துவிட்டனர்.
நாங்கள் கண்டுபிடித்திருக்கும் மருந்தை உட்கொள்ளும் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளி, 5 முதல் 14 நாட்களுக்குள் குணமடைவதுடன், கோவிட் பரிசோதனையில் நெகட்டிவ் தொற்று இருப்பதும் உறுதிப்படுத்தப்படுவார்.
ஆயுர்வேதத்தில் 100% இதற்கு குணப்படுத்தும் வழிகள் உள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட க்ளினிக்கல் ட்ரையல்களை நடத்தி வருகிறோம். இன்னும் 4 அல்லது 5 நாட்களில் தரவுகள் மற்றும் ஆதாரங்களுடன் எங்களின் மருந்தை வெளியிடுவோம்” என்று தெரிவித்தார்.