
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மருத்துவமனை சிகிச்சை கட்டணமாக சுமார் ரூ.8 கோடியே 52 லட்சம் பில் வந்துள்ள சம்பவம் அதிர வைத்துள்ளது.
அமெரிக்காவை கொரோனா ஆட்டிப்படைத்து வருகிறது, மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அமெரிக்காவில் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அங்கு கொரோனாவை எதிர்த்து போராடி மீண்டு வந்தவருக்கு மருத்துவமனை சிகிச்சை கட்டணத்தை பார்த்த பிறகு தலை சுற்றி விட்டது என்றே சொல்லலாம்.
அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் வசிக்கும் 70 வயதான முதியவர் ஒருவர் கடந்த மார்ச் 4ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மரணத்தின் விளிம்பிற்கு சென்ற அவர் சுமார் 62 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு மே 5ம் தேதி கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அவரது கையில் கொடுத்த 181 பக்க பில்லை பார்த்து திகைத்து நின்று விட்டார். ஏனென்றால் அதில் 11,22,501.04 டாலர்கள் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடியே 52 லட்சம்) சிகிச்சை கட்டணமாக குறிப்பிடப்பட்டிருந்தது.
கொரோனாவில் இருந்து மீண்டு வந்ததை கூட அவரால் கொண்டாட முடியவில்லை. இந்த கட்டணத்தை பார்த்து இதயமே நின்று விட்டதைப்போல் உணர்ந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். முதியோருக்கான அரசாங்க காப்பீட்டு திட்டமான மெடிக்கேர் திட்டத்தின் கீழ், அவர் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சுகாதார கட்டமைப்பு வலுவாக உள்ள அமெரிக்காவில், அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவது பேசுபொருளாக மாறியுள்ளது. கொரோனாவால் அமெரிக்க பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை சமாளிக்க மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.