
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செங்கல் சூளைக்கு மணல் ஏற்றி வந்த லாரி மோதியதில் 2 வயது சிறுமி பலி. நகர் காவல்துறையினர் விசாரணை.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்டது குலாலர் தெரு பகுதி. தென் திருப்பதி என்று அழைக்கப்படும் திருவண்ணாமலைக்கு செல்லும் பிரதான சாலையில் எட்டு மாதங்களாக பாலம் வேலை நடைபெறுவதால் கனரக வாகனங்கள் செங்கல் பணிக்கு செல்லும் வாகனங்கள் என சுமார் 1000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் அருகில் உள்ள குடியிருப்பு வழியாக செல்கின்றன.

இந்நிலையில் குலாலர் தெரு பகுதியில் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வரும் பரமகுரு மகாலட்சுமி தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூன்றாவது மகள் மோகனரிஷி என்ற 2 வயது குழந்தை இவர்களது வீட்டின் முன் விளையாடி கொண்டு இருந்த நிலையில் தண்ணீர் எடுக்கச் சென்ற தனது தாயின் கண் முன்னே செங்கல் சூளை பணிக்காக மண் ஏற்றி வந்த லாரி மோதியதில் பின் சக்கரத்தில் உடல் நசுங்கி சிறுமி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த காவல் துறையினர் குழந்தையின் உடலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்க முற்பட்ட போது நீண்ட நேரமாக உடலை எடுக்கவிடாமல் காவல்துறையினரிடம் அருகில் இருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு இறந்த குழந்தையின் உடலை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை