October 29, 2021, 1:41 am
More

  ARTICLE - SECTIONS

  போலீஸ் அடி… தந்தை, மகன் மரணம்; போலீஸார் இருவரை இடம் மாற்றிய எஸ்.பி; பணியிடை நீக்கம் செய்த ஆட்சியர்!

  மகன் கண் முன்பே தந்தையை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இருவரும் ஆசனவாய்க்கு மேலாக லத்தியால் கடுமையாக தாக்கப்பட்டனர்

  sathankulam son and father
  sathankulam son and father

  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் அனுமதிக்கப் பட்ட நேரம் கடந்தும் கடை திறந்து வைத்ததாகக் கூறிய போலீஸார், மொபைல் கடைக்காரரையும் அவர் தந்தையையும் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் விசாரணையில் போலீஸாரின் காட்டுமிராண்டித்தனமான அடியினால், இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனை அடுத்து சாத்தான்குளத்தில் போராட்டம் வெடித்தது. வணிகர்கள், பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட காவலர்கள் இருவரையும் ஆயுதப் படைக்கு மாற்றியிருப்பதாக மாவட்ட எஸ்பி., கூற, ஆட்சியரோ, அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டதாகக் கூறினார். .

  தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி சாத்தான்குளத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், சாத்தான்குளம் விசாரணைக் கைதிகள் இறந்ததற்கு போலிசார் தான் காரணம் என்ற குற்றச்சாட்டினை விசாரிக்க நீதிபதி தலைமையில் விசாரணை தொடங்கி உள்ளது.

  பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்பு நிவாரணம் பற்றி அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு எஸ்.ஐக்கள், காவலர்கள் பணியிட நீக்கம் செய்யபட்டுள்ளனர். ஆய்வாளர் உள்ளிட்ட காவல்நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களும் கூண்டோடு மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்… என்றார்.

  இதனிடையே, சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் உடலை பிரேத பரிசோதனை செய்ய, பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மரக்கடை நடத்தி வருபவர் ஜெயராஜ் (வயது 63). இவரது மகன் பென்னிக்ஸ் (வயது 31). அதே பகுதியில் மொபைல் போன் கடை நடத்திவருகிறார். கடந்த 19ஆம் தேதி இரவு 9 மணி அளவில் போலீசார் முருகன், முத்துராஜ் ஆகியோர் அந்தப் பகுதியில் ரோந்து வந்தனர். ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து மொபைல் போன் கடை திறந்து வைத்திருப்பதாகக் கூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரிடம் கடைகளை அடைக்குமாறு போலீஸார் கூறினர்.

  sathankulam policemen
  sathankulam policemen

  அப்போது இருவருக்கும் வாக்குவாதம் வளர்ந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த போலீசார் தந்தை, மகன் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் மீது ஜாமினில் வெளி வர முடியாதபடி 188, 269, 29பி, 353, 506 2 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

  போலீஸார் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தன விசாரணையின் போது வயதான நபர் என்றும் பாராமல், மகன் கண் முன்பே தந்தையை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இருவரும் ஆசனவாய்க்கு மேலாக லத்தியால் கடுமையாக தாக்கப்பட்டனர். தொடர்ந்து ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

  போலீசாரின் கண்மூடித்தனமான அடி காரணமாக 22ஆம் தேதி இரவு 8:00 மணிக்கு பென்னிக்ஸ் உடல்நிலை பாதிக்கப்பட்டது. கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கடுமையான காயங்களுடன் இருந்த ஜெயராஜும் இன்று அதிகாலை 5:30க்கு உயிரிழந்தார். இருவரது உடல்களும் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.
  இதனிடையே, இறந்தவர்களின் உடல்களில், போலீசார் தாக்கிய காயங்கள் உள்ளதா என்பது குறித்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நேரில் ஆய்வு செய்தார். இந்நிலையில், இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த சாத்தான்குளம் பொதுமக்கள், வியாபாரிகள் காமராஜர் சிலை முன் திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

  இதை அடுத்து எஸ்.ஐ.,க்கள் இருவரையும் எஸ்,பி., அருண் பாலகோபாலன் ஆயுதப்படைக்கு மாற்றுவதாகக் கூறினார். ஆனால் ஆட்சியர் சந்தீப் நந்தூரி, எஸ்.ஐ.க்களை பணியிடைநீக்கம் செய்தும், சாத்தான்குளம் போலீசாரை கூண்டோடு மாற்றம் செய்தும் உத்தரவிட்டார்.

  இந்நிலையில், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திமுக., தலைவர் ஸ்டாலின், துாத்துக்குடி எம்.பி., கனிமொழி, ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் அறிக்கை விடுத்தனர்.

  அது போல், காவல்துறையினரின் தாக்குதலில் இரு வணிகர்கள் உயிரிழந்தது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும். தவறு செய்த காவலர்களை பணியிடை நீக்கம் செய்திருப்பது மட்டும் போதுமானதல்ல; சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 302-இன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த வணிகர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்… என்று பாமக நிறுவுனர் ராமதாஸும் அறிக்கை வெளியிட்டார்.

  மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன், இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு உள்துறை முதன்மை செயலாளருக்கும், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.,க்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும், மனித உரிமை ஆணைய விசாரணைக் குழுவினர் சம்பவம் குறித்து நேரில் விசாரித்து அறிக்கை அளிப்பார்கள் என்றும் கூறினார்.

  இதனிடையே, ஜெயராஜின் மனைவி செல்வராணி உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில், போலீசார் கடுமையாக தாக்கியதால் தான், கணவனும் மகனும் மரணமடைந்தனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்து அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

  இதனை விசாரித்த நீதிமன்றம், இருவரது உடல் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், 3 டாக்டர்கள் கொண்ட குழு முன்னிலையில் வீடியோ பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி முதல்வருக்கு உத்தரவிட்டனர்.

  இதனிடையே, உயிரிழந்த இருவரும் வணிகர்கள் என்பதால் நாளை 24ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தப் போவதாக வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  368FollowersFollow
  39FollowersFollow
  74FollowersFollow
  1,593FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-