நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் இமாலய ஊழல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை: நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதில் இமாலய ஊழல் நடைபெறுகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவிலேயே கல்வித்துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருந்த அதேநேரத்தில் நூலகத் துறையிலும் அத்தகைய பெருமையை பெற்றிருந்தது. தமிழகத்தின் நூலகத் துறை இந்தியாவிற்கே முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் இருந்தது. அத்தகைய நூலகத் துறை கடந்த சில ஆண்டுகளாக சீரழிந்து வருவது மிகுந்த வேதனையைத் தருகிறது. பணம் கொடுத்து நூல்களை வாங்கிப் படிக்கும் வசதியில்லாத கிராமப்புற ஏழை மக்கள், புதிய நூல்களை வாசிக்கச் செல்லும் ஒரே இடம், உள்ளூர் கிளை நூலகங்கள்தான். தமிழ்நாட்டில் சுமார் 4,000 கிளை நூலகங்கள் பொது நூலகத் துறையின் கீழ் பெயரளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அடிப்படை வசதிகள் இல்லாமல், நூலகர்கள் இல்லாமல், புதிய நூல்கள் வாங்காமல், அமர்ந்து படிக்க இருக்கை வசதிகளும், போதிய இடமும் இல்லாமல் சீர்கெட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ரூபாய் 60 லட்சத்திற்குமேல் செலவு செய்து புதுப்பிக்கப்பட்ட ‘தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம்” இப்போது எந்த நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி தராமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பொது நூலகத் துறையின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி முடிய ‘தேசிய நூலக வார விழா” கொண்டாடுவது அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள நான்கு பல்கலைக்கழகங்கள் நடத்தும் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பல்லாயிரக்கணக்கானவர்கள் நூலகவியலில் பட்டங்களைப் பெற்றுக் கொண்டு வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பொது நூலகத் துறையில் ஆயிரக்கணக்கான நூலகர் பதவிகள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. சென்னை நகரில் உள்ள சுமார் 150 கிளை நூலகங்களில், 60 க்கும் மேற்பட்ட கிளை நூலகங்கள் நூலகர்கள் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றை நிர்வகிப்பது தினக்கூலிகள்தான். அதிலும் கிராமப்புற பகுதி நேர நூலகங்களை நிர்வகிப்பவர்களுக்கு தினக்கூலி ரூ.20 மட்டும் வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச கூலி கொடுக்க தமிழக ஆட்சியாளர்கள் தயாராக இல்லை.இந்திய அளவில் பெருமை பெற்ற சென்னை, கன்னிமரா பொது நூலகத்தில் 150 பணியாளர்களும், நூலகர்களும் பணியாற்ற வேண்டிய இடத்தில், தற்போது வெறும் 22 பேர்தான் பணியாற்றுகிறார்கள். அந்த நூலகத்தில் நூலகப் பணிகள் எப்படிச் செம்மையாக நடைபெறும்? நூலகர்களை கேவலப்படுத்துவது, தமிழ்நாட்டு வாசகர்களைக் கேவலப்படுத்துவதற்கு சமமாகும். எதிர்கால தலைமுறையை செதுக்கி, செம்மைப்படுத்துகிற நூலகத்துறையை லஞ்ச வேட்டைக்கு உட்படுத்துவதை விட கொடுமையானது வேறு எதுவும் இருக்க முடியாது. நூலகங்களுக்கு வாங்குகிற நூல்களில் நடைபெறுகிற இமாலய ஊழலை கண்டு வெட்கி தலைகுனிவதை தவிர வேறு வழியில்லை. இதற்கெல்லாம் இறுதி முடிவுகட்டுகிற பொறுப்பு தமிழக மக்களிடம் இருக்கிறது. என்று கூறியுள்ளார்.