
யாக குண்டத்தில் எடுத்த சூடான நாணயங்களை ஸ்கூட்டரில் கொண்டு சென்றபோது சேலையில் தீப்பற்றியதில் படுகாயமடைந்த மேலவளவு ஊராட்சி மன்ற துணை தலைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சி அழகிரிபட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி சங்கீதா (33). இவர் மேலவளவு ஊராட்சி மன்ற துணை தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி சங்கீதா கச்சிராயன்பட்டியில் நடந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
அங்கு யாக குண்டத்தில் போடப்பட்ட காசுகளை எடுத்து, வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என நம்பிக்கையினால், அவர் யாக குண்டத்தில் இருந்து சூடான நாணயங்களை எடுத்து பொட்டலமாக மடித்து, தனது ஸ்கூட்டரின் இருக்கையின் அடியில் வைத்துள்ளார்.
பின்னர், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலக்கிபட்டி 4 வழிச்சாலையில் திடீரென சூடான நாணயங்களில் தீப்பற்றியதில், சங்கீதாவின் சேலையில் தீ பரவியது.
பின்னர், மளமளவென உடல் முழுவதும் தீப் பற்றியதில் அவர் பலத்த தீக்காயமடைந்தார். அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைககாக அனுமதித்தனர்.
உடலில் 50 சதவீதத்திற்கும் மேல் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.