விஜய் நடித்த ஃப்ரண்டஸ், ஆர்யா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இவர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி தன்னுடன் வாழ்ந்து வந்தார் என்று தொடர்ந்து புகார் கூறி வந்தார்.
சீமான் தன்னுடன் இருந்ததாகக் கூறி சில அந்தரங்க வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அவரது கருத்தையோ குற்றச்சாட்டையோ எவரும் பெரிதாக எடுத்துக் கொண்டு, சீமான் மீது புகார் கொடுக்கவோ அல்லது புறக்கணிக்கவோ இல்லை.
வழக்கம் போல் அரசியல் செல்வாக்குடன் சீமான் நடமாடிக் கொண்டு தான் இருக்கிறார். இளைய சமுதாயத்தை மூளைச் சலவை செய்யும் மகத்தான பணியையும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி, சென்னை திருவான்மியூரில் உள்ள தமது இல்லத்தில் இன்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதற்கு முன்னதாக அவர் ஒரு வீடியோ வெளியிட்டார். ‘நான் இந்த சாதிதான்’ என்று கூறி, தாம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சமூகத்தை சேர்ந்தவர் என்றும், சீமானுக்காக அடியாள் வேலை பார்க்கும் ஹரிநாடார் என்னை மிரட்டினார் என்றும் அதன் பின்னர் தனக்கு அவமானமாக உணர்ந்ததால், பெரும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறி, தான் உச்ச பட்ச முடிவு எடுத்துள்ளதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
தான் மிகுந்த மனஅழுத்தத்தில் இருப்பதால் தற்கொலை செய்து கொள்ள உள்ளதாகவும், இதுவே தான் பேசும் கடைசி வீடியோ என்றும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ சமூகத் தளங்களில் இப்போது வைரலாகி வருகிறது.
இதையடுத்து அவர் சென்னை அடையாறில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.