
சென்னை:
போலி இருப்பிடச் சான்றிதழ் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றபோது, சில மாணவர்கள் பிடிபட்டனர். இது குறித்த செய்தி ஓரிரு நாட்களில் வெளி வந்த நிலையில், இதற்கு திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்ட செய்தியில், #VyapamScam வியாபம் முறைகேடு போல இரட்டை இருப்பிடச் சான்றிதழ் மூலம் தமிழக கல்லூரிகளில் வெளிமாநில மாணவர்கள் இடம்பெற்றிருப்பது குறித்து #CBI சிபிஐ விசாரிக்க வேண்டும். போலி சான்றிதழ் & முறைகேடான தேர்வு மூலம் வேறு மாநிலத்தவர்கள் தமிழக மருத்துவ கல்லூரிகளில் சேர குதிரை பேர அரசு துணைபோயிருப்பது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.
#VyapamScam போல இரட்டை இருப்பிடச் சான்றிதழ் மூலம் தமிழக கல்லூரிகளில் வெளிமாநில மாணவர்கள் இடம்பெற்றிருப்பது குறித்து #CBI விசாரிக்க வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) August 28, 2017
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியபோது, கேரளாவைச் சேர்ந்த 9 மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
தமிழகத்தில் நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், சுயநிதி மருத்துவக் கல்லூரி மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டு இடங்களுக்குமான தர வரிசைப்பட்டியலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். அதன் அடிப்படையில், கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்புக் கலந்தாய்வு நடைபெற்றது. அடுத்த நாள் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது.
இந்தக் கலந்தாய்வில் பங்கேற்றோர் தங்களின் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதில் கேரளாவைச் சேர்ந்த 9 மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றுடன் பங்கேற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் அம்ஜத் அலி என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் இதுதொடர்பாக புகார் அளித்தார். அதில், தமிழக அரசு மற்றும் கேரள அரசு வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலை ஆராய்ந்து பார்த்ததில், 9 பேர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளதாகக் கூறினார். கேரளாவில் மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைப்பது கடினம் என்பதால், அவர்கள் தமிழகத்தில் போலியான இருப்பிட முகவரி பெற்று விண்ணப்பத்திருக்கலாம் என்று அரசு வழக்கறிஞர் சந்தேகம் எழுப்பியுள்ளார். இதேபோல் மற்ற மாநிலத்தவர்களும் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரின் இந்த மனுவைப் பெற்ற சென்னை காவல் ஆணையர், புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன், மருத்துவக் கலந்தாய்வில் கேரளாவைச் சேர்ந்த 9 மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் வழங்கியிருப்பதை உறுதி செய்தார். அவர்கள் மீது முறைப்படி புகார் பதியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போலி இருப்பிடச் சான்றிதழ் வழங்கும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
ஏற்கெனவே, நீட் தேர்வு நடத்தப்பட்டதால் தமிழகத்தைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கஷ்டப்பட்டு படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கலந்தாய்விலும் சிலர் பங்கேற்றுள்ளனர். அந்த இடத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் போலி இருப்பிடச்சான்று மூலம் தமிழக மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய முயற்சி செய்கின்றனர்.
ஆனால், இதன் பின்னணியில், ஒரு நெட்வொர்க் இயங்குகிறது என்பது பகீர் தகவல். சமூக வலைத்தளங்களில் இந்தப் பிரச்னை குறித்து பெருத்த விவாதம் எழுந்துள்ளது. இவ்வாறு சேர முயற்சி செய்த மாணவர்கள் இஸ்லாமிய மாணவர்களே என்று ஒரு தரப்பு குற்றம் சாட்டுகிறது.
கேரளா , மேற்கு வங்கம் , காஷ்மீர் , பிகார் , உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து இந்த மாணவர்களைத் தமிழகக் கல்லூரிகளில் திட்டமிட்டு சேர்த்து வருகின்றனர் என்றும்,
மதமாற்றம், லவ் ஜிகாத், பயங்கரவாதப் பயிற்சி போன்றவற்றை கல்வி நிலையங்களில் அரங்கேற்ற நடக்கும் சூழ்ச்சி இது என்றும், இதனை Campus Front of India என்ற அமைப்பு திறம்படச் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனிடையே இந்தப் பிரச்னை குறித்து திமுக., செயல் தலைவர் மு.க. ஸ்டாலினும் குரல் கொடுத்துள்ளார். சிபிஐ விசாரணை நடத்தப் பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கோருவது போல் சிபிஐ விசாரணை நடத்தப்பட்டால், சிலர் கூறும் பகீர் புகார் தொடர்பான உண்மைகள் வெளிவரும்.



