பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று கூறி பொதுமக்கள்
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாவூர்சத்திரம், மேலப்பாவூர், திப்பணம்பட்டி, ஆவுடையானூர் நீண்ட நாட்களாக
அரசு மதுக்கடை இயங்கி வந்தது. அக்கடைகளை நிரந்தரமாக மூடக் கோரி அந்தந்த பகுதி
மக்கள் தொடர்ந்து தொடர் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த கடைகள் மூடப்பட்டது.
கடந்த பல மாதங்களாக மூடப்பட்ட பாவூர்சத்திரம் கடையை நெல்லை – தென்காசி தேசிய
நெடுஞ்சாலை கே.டி.சி நகரில் இருந்து சின்னதம்பிநாடார்பட்டி செல்லும் வழியில்
தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் வைப்பதற்காக நேற்று முன்தினம் இரவு 11
மணியளவில் மதுபானங்களை லாரியில் கொண்டு வந்து இறக்கினர். நேற்று பகல் 12
மணிக்கு டாஸ்மாக் கடை திறப்பதற்கு முயன்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த கல்லூரணி, கேடிசிநகர், சின்னதம்பிநாடார்பட்டி
ஆண்கள் பெண்கள் என 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதிய டாஸ்மாக் கடையை
திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி கடை முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
இதையறிந்த பாவூர்சத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சு வார்த்தையில் தாசில்தார் மற்றும் டாஸ்மாக் உயர் அதிகாரிகளிடம்
பேசி இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். அது வரை டாஸ்மாக் கடை திறக்கப்படாது
என்று கூறியதையடுத்து முற்றுகையிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
முற்றுகை போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது 100க்கும் மேற்பட்ட குடிமகன்கள்
கடையை திறக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் இரு
தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதையறிந்த போலீசார் இருதரப்பினரையும்
சமாதானம் செய்தனர்.



