சென்னை:
சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ‘முரசொலி’ பவளவிழா பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசியத்தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், “முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் கடந்த 11-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. மழை காரணமாக இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அந்த மழை வராமல் போயிருந்தால் இன்றைக்கு இங்கே அண்ணன் வைகோ வந்திருக்கமாட்டார். வேறு சில தலைவர்களும் வந்திருக்கமாட்டார்கள். தொண்டர்கள் பொறுமையாகவும், எழுச்சியாகவும் இருப்பதை பார்க்கும்போது நாட்டிலே ஆட்சி மாற்றம் வருகிறதோ இல்லையோ, மீட்சி வரும். இன்றைக்கு மாணவி அனிதாவை பறி கொடுத்து இருக்கிறோம். கையாலாகாத அ.தி.மு.க அரசு, மத்திய அரசுடன் கைகோர்த்து ஜனநாயக விரோதமாக செயல்பட்டு வருகிறது.
சமூக நீதியை காக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். கருணாநிதி பிறந்தநாள் கூட்டத்தில் தேசிய தலைவர்கள் பங்கேற்றனர். சில தமிழக தலைவர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. அந்தக்குறை இன்றைக்கு தீர்க்கப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன்.
சமூக நீதியை காக்க வேறுபாடுகள், மாறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க.வில் ஏற்பட்டிருக்கும் பிளவை பயன்படுத்தி, காலூன்ற பா.ஜ.க. திட்டமிடுகிறது. அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் எட்டா கனிக்கு கொட்டாவி விடுவதுபோல.. என்ற பழமொழியை தான். மோடி ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம்… இதை செய்வோம்… என்று கதைவிட்டார். மத்திய மோடி ஆட்சி வெறும் மோசடி ஆட்சியாக நடைபெறுகிறது. எனவே மோடி ஆட்சியை அகற்றுவோம்” என்று பேசினார்.
முன்னதாக, முரசொலி பவள விழாவின் துவக்கமே மறைந்த மாணவி அனிதாவுக்கு மௌன அஞ்சலி செலுத்துவதுடன் தான் தொடங்கியது. விழாவின் மேடையிலும் அனிதா உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இருப்பினும், விழாவில் பேசிய ஸ்டாலின், அனிதாவின் பெயரை சனிதா என்று மாற்றிச் சொல்லி அதிர்ச்சி கொடுத்தார். “சமூக நீதியையே இல்லாமல் செய்துவிடும் அளவிற்கு மாணவி ஒருவரின் மரணம் இருந்துவிட்டது. நீட் தேர்வினால் மருத்துவபடிப்பிற்கு இடம் கிடைக்காமல் அரியலுாரைச் சேர்ந்த மாணவி சனிதா…’ என்று பேசினார் ஸ்டாலின். இருப்பினும், திடீரென தன் கையில் வைத்திருந்த பேப்பரைப் பார்த்தவர், ‘மாணவி அனிதா’ என்று திருத்திச் சொன்னார். இதே போல் இரண்டு முறை அனிதாவின் பெயரை ‘சனி’தா என்று சொல்லி திருத்தம் செய்தார் ஸ்டாலின்.
அனிதா என்ற பெயர் தமிழகம் முழுதும் உச்சரிக்கபட்டு வரும் நிலையில் முரசொலி பவள விழாவில் ஸ்டாலின் அனிதாவின் பெயரையே மாற்றி குறிப்பிட்டது கூட்டத்தில் இருந்த திமுக.,வினரையே முகம் சுளிக்கவைத்தது.



