பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், பெண் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் (55) மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கர்நாடகாவைச் சேர்ந்த நக்ஸல் ஆதரவு எழுத்தாளர் பி.லங்கேஷ். அவரது மூத்த மகள் கௌரி லங்கேஷ் பல்வேறு பத்திரிகைகளிலும் முற்போக்குச் சிந்தனைக் கட்டுரைகள் எழுதி வந்தார். கன்னட மொழியில் வெளியாகும் ‘லங்கேஷ் பத்திரிகே’ பத்திரிக்கையை நடத்தி வந்தார். அதன் ஆசிரியராகவும் இருந்து வந்தார்.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி நகரில் தன் வீட்டின் முன் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வெளியில் காரில் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பிய அவரை மர்ம நபர்கள் 2 பேர் பின் தொடர்ந்து வந்தனராம். வீட்டுக்கு வந்த அவரை சாலையில் வைத்து, அந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடி விட்டனர் என்று கூறப்படுகிறது. கொலையாளிகள் சுமார் 5-6 அடி அருகில் இருந்து, 7 ரவுண்ட் சுட்டதில் 3 குண்டுகள் அவரது நெஞ்சு, வயிற்றுப் பகுதியிலும் ஒரு குண்டு அவரது நெற்றியிலும் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து அறிந்து அங்கே விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 தனிப்படைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடக உள்துறை அமைச்சர் சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கொலையான கௌரி லங்கேஷ், இடதுசாரி சிந்தனைகள் அதிகம் கொண்டவராக இருந்தவர். தனது எழுத்துக்களில் பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளை தொடர்ந்து விமர்சனம் செய்து எழுதி வந்தார். தனது முகநூல், டிவிட்டர் பதிவுகளில் பிரதமர் மோடியையும் அவதூறாக எழுதி வந்தார்.
கடந்த 2008ஆம் ஆண்டில், பா.ஜ.க, எம்.பி., பிரகலாத் ஜோஷியை அவதூறாகப் பத்திரிகையில் எழுதியதற்காக, இவர் மீது பிரகலாத் ஜோஷி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் 2016ஆம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவருக்கு 6 மாதம் சிறை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அவர் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அப்போது நியூ இண்டியன் எக்ஸ்ப்ரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அவர்கள் நான் உள்ளே செல்வேன் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் நான் ஜாமின் பெற்று விட்டேன் என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.
கௌரி லங்கேஷ் கொலைக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கேரளா யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் இன்று மதியம் 12 மணியளவில் தில்லி, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த உள்ளனர். சென்னை பத்திரிகையாளர்கள் சார்பில் காலை 11 மணிக்கு சென்னை பிரஷ் கிளப் முன்பு போராட்டம் நடைபெறுகிறது. இதேபோல், மும்பையில் மாலை 6 மணிக்கும், ஐதராபாத்தில் மாலை 4 மணிக்கும், பெங்களூருவில் காலை 8.45 மணிக்கும், மாண்டியாவில் காலை 10 மணிக்கும் அந்தந்த மாநில பத்திரிகையாளர்கள் சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.



