நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே
சென்னை-கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் உள்ள நாரணம்மாள்புரம் விலக்கு என்ற
இடத்தில், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கேஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற
லாரியின் மீது அந்த வழியாக வந்த தண்ணீர் டேங்கர் லாரி மோதியது. இதில் இரு
லாரிகளிலும் இருந்த 3 பேர் காயம் அடைந்தனர். மேலும் சிலிண்டர் லாரி சாலையில்
கவிழ்ந்தது.
இது குறித்து தகவல் அறிந்த தாழையூத்து காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராகப்
பணியாற்றி வந்த அகிலா சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
அவருடன் சென்ற காவலர்களும், லாரியின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பழம் ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் செல்வதற்காக வேன் ஒன்று
வேகமாக வந்துள்ளது.
சாலையில் நின்று கொண்டிருந்த அனிதா மீது அந்த வேன் வேகமாக மோதியது. இதில்
தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இச் சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
அருண்சக்தி குமார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் மாதவன் என்பவர் கைது
செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்யச் சென்ற பெண் எஸ்.ஐ அனிதா
விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும்,
சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.




