பெங்களூர்:
பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் 19 அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது மாநில அரசு.
பெங்களூருவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் நேற்று இரவு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் இதுகுறித்து விசாரிக்க கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.
கௌரி லங்கேஷ் கொலை தொடர்பாக, போலீசார் விசாரணையை துவக்கியுள்ள நிலையில், மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், கௌரி லங்கேஷ் கொலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி, கர்நாடக அரசின் தலைமைச் செயலாளரை தொடர்பு கொண்டு இதுகுறித்த விவரங்களை தாக்கல் செய்யும்படி கூறியுள்ளார்.
இதனிடையே, கௌரி லங்கேஷ் கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தப் பட வேண்டும் என்று மத்திய அமைச்சரும் கர்நாடகத்தைச் சேர்ந்தவருமான சதானந்த கவுடா கூறியுள்ளார். கர்நாடக மாநில அரசு, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் கவுட.
இந்நிலையில் கௌரி லங்கேஷ் கொலை குறித்து விசாரிக்க, 19 அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை ஐஜிபி பிகே சிங் தலைமையில் 19 அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணை குழு இந்த விவகாரத்தை விசாரிக்கும்.



