மும்பை:
இந்திய வங்கிகளில் வராக்கடன் அளவு ஒவ்வொரு காலாண்டிலும் அதிகளவில் உயர்ந்து வங்கி நிர்வாகத்தைச் சோகத்தில் மூழ்கடிப்பது மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தையே கேள்விக்குறியாக்கி வருகிறது.
இந்நிலையில் நாட்டின் முன்னணி வங்கிகளில் ஹிண்டால்கோ நிறுவனம் இந்த மாதம் சுமார் 1,100 கோடி ரூபாய் அளவிலான கடனை அடைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தனது நிறுவனத்தின் இருப்பு நிலை அறிக்கை சற்று மேம்படும் எனத் தெரிவித்துள்ளது ஹிண்டால்கோ நிறுவனம்.
நாட்டின் முன்னணி வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ஆதித்யா பிர்லா குழுத்தின் கீழ் இருக்கும் ஹிண்டால்கோ நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய அலுமினியம் தயாரிக்கும் நிறுவனமாகும். ஹிண்டால்கோ நிறுவனம் இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் வாங்கியிருந்த கடனில் 7,815 கோடி ரூபாயை திருப்பிச் செலுத்தியுள்ள நிலையில், தற்போது கூடுதலாக 1,100 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் வருடம் 800 கோடி ரூபாய் அளவிலான பணத்தைச் சேமிக்க முடியும் என ஹிண்டால்கோ நிறுவன தலைவர் குமார் மங்களம் பிர்லா தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்நிறுவனம் QIP வெளியீட்டின் மூலம் சுமார் 500 மில்லியன் டாலர் நிதியைத் திரட்டியுள்ள காரணத்தால், கடன் சுமைகளைக் குறைக்கும் முடிவில் இறக்கியுள்ளது ஆதித்யா பிர்லா தலைமையிலான ஹிண்டால்கோ நிறுவனம்.
2017ஆம் நிதியாண்டின் முடிவில் ஹிண்டால்கோ நிறுவனம் 1,02,631 கோடி ரூபாய் வருவாயுடன் வரிகளுக்குப் பிந்தைய லாபமாகச் சுமார் 13,547 கோடி ரூபாயை பெற்றுள்ளது. தற்போது கடனை அளவைக் குறைத்துள்ளதால் இந்நிறுவனம் கூடுதல் லாபத்தை அடையும்.
ஹிண்டால்கோ மற்றும் அமெரிக்காவில் இருக்கும் இதன் கிளை நிறுவனமான நோவெலிஸ் நிறுவனங்களின் அலுமினியம் மற்றும் காப்பர் வர்த்தகம் சிறப்பாக இருக்கும் இந்த நேரத்தில் கடன் அளவைக் குறைத்ததன் மூலம் அதிகளவிலான லாபத்தை இந்நிறுவனங்கள் எதிர்பார்க்க முடியும்.



