ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு, சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி k.பழனிசாமி வந்திருந்தார். அப்போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது… தொடர்ந்து கொரானா பரவலை கட்டுப்படுத்த எடுத்த சீரிய நடவடிக்கையால் பல்வேறு பலனை தற்போது தமிழகம் பெற்று வருகிறது. அரசு கூறும் கொரோனா அடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
வேளாண் மசோதா நேரத்தில் பாலசுப்பிரமணியனின் மாற்றுக் கருத்துக்கு அவரிடம் விளக்கம் கேட்கப்படும். மத்திய அரசின் வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது விவசாயிகளுக்கு நன்மை பயக்கக்கூடிய திட்டமாகத் தான் இருக்கும்.
தற்போது உள்ள மசோதா ஏற்கெனவே தமிழகத்தில் பின்பற்றப் பட்டு வருகின்றது. மற்ற மாநிலங்களில் இந்த சட்டம் இல்லாததால் இப்போது அது குறித்து அச்சம் கிளப்புகிறார்கள். தமிழக விவசாயிகள் எந்த வகையிலும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்!
தமிழக மக்கள், விவசாயிகளுக்கு எதிராக எந்த திட்டங்கள் வந்தாலும் எதிர்ப்போம். வேளாண் மசோதாக்கள் குறித்து விவரம் தெரியாமல் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார்… என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
8 மாதத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்று ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த போது… ஸ்டாலின் ஜோதிடம் பார்ப்பவராக இருக்கிறார் நாங்கள் ஜோதிடம் பார்க்கவில்லை மக்களை தான் நம்புகிறோம். துரைமுருகன் மகனை யாராவது மிரட்ட முடியுமா சாதாரண திமுக தொண்டன் கூட மிரட்ட முடியாது… என்றார்
மேலும், மதுரையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம் குறிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனை 11 மருத்துவ கல்லூரிகள் போன்ற கல்வியில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
14,000 கோடி மதிப்புள்ள காவிரி குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற உள்ளோம். கரூர் திருச்சி புதுக்கோட்டை சிவகங்கை விருதுநகர் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று அங்கு உள்ள ஏரிகளை நிரப்பும் அற்புதமான திட்டமாக தடுப்பணை கட்டி வருகின்றோம்.
தமிழகத்தின் இரண்டாம் தலைநகரமாக மதுரை தென்மாவட்ட மக்கள் கோரிக்கையாக உள்ளது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரையும் இப்படி தலைநகரமாக அறிவிக்கக் கோரி கூறுவதால் எத்தனை தலை நகரங்கள் அமைக்க முடியும்… என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் லாக்கப் டெத் அதிக அளவில் இருப்பது குறித்த கேள்விக்கு மரணம் என்றால் உரிய விசாரணையில் யார் தவறு செய்தாலும் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். இறைவன் கொடுத்துள்ள உடலை மக்களுக்கு தியாகம் செய்வதற்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்டு கொரோனா சூழலிலும் மக்கள் சேவையில் தொடர்ந்து தமிழக அரசு பணியாற்றி கொண்டு இருக்கிறது.
டெல்லி போன்ற வட மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் தமிழகம் குறிப்பாக சென்னையில் குறைந்து வருவதற்கு அமைச்சர்கள் முயற்சியால் தான்… என்றார்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை