கரூர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜோதிமணி. இவர், கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேடசந்தூரை அடுத்த ஆர்.கோம்பை பகுதியில் சிப்கோ நிறுவனம் அமைப்பதற்காக முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் அதனைத் தடுத்து நிறுத்த போராட்டம் நடத்தச் சென்றார்.
அப்போது அதிமுக ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் வந்து இந்த சிப்கோ நிறுவனம் வந்தால் 5000 இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று எடுத்துக் கூறினார். ஆனால் ஜோதிமணி அதற்கு செவி சாய்க்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்கள், தேர்தலில் வெற்றி பெற்று ஒருவருடம் கடந்த நிலையிலும், வெற்றி பெற்றதற்காக தொகுதி மக்களுக்கு நன்றி கூட தெரிக்க வரவில்லை; ஆனால் தற்போது பொய்யாக போராட்டம் செய்ய வருகிறீர்களே என்று கேட்டனர்.
ஆனால் அதற்கு பதில் அளிக்காமல் உடன் வந்த திமுகவினர் பொதுமக்களை தள்ளி விட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மக்கள் கேள்வி எழுப்புவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், ஜோதிமணி மக்களுக்கு பதில் கொடுக்காமல் இருக்க, ஜோதிமணியை பத்திரமாக மீட்ட அவரது ஆதரவாளர்கள், அவரை அவரது கார் நோக்கி வேகமாகச் செல்ல வைத்தனர். வேகமாகச் சென்ற ஜோதிமணி, காரில் அமர்ந்து விருட்டென சென்று விட்டார்.
தொகுதி வளர்ச்சியைத் தடுக்கும் விதத்தில் செயல்படும் எம்.பி.,யை தேர்வு செய்ததற்காக தாங்கள் வெட்கப் படுவதாக தொகுதி மக்கள் அப்போது தெரிவித்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.