இந்த அரசு ஆட்சியையும் ஆலயத்தையும் விட்டு அகலும்! நெல்லையப்பரின் தொண்டர்கள் சாபம்!
திருநெல்வேலியில் மிகவும் புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் ஆலயத்தில் இன்று திருக்கல்யாண உற்சவம் களை கட்டி இருக்க வேண்டும் ஆனால் அறநிலையத்துறை மற்றும் காவல்துறையினரால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் திருவிழா வெறும் சம்பிரதாய மிரட்சியாக மாற்றப்பட்டு நடந்தேறியுள்ளது
இன்று சுவாமி நெல்லையப்பர் காந்திமதி திருக்கல்யாண உத்ஸவம் என்று மனத்தில் ஆயிரமாயிரம் ஆசைகளையும் ஏக்கங்களையும் தேக்கிக் கொண்டு பெரும் ஆர்வத்துடன் அதிகாலை 4 மணிக்கே ஆலயத்தின் வாசலில் கூடி சிவனடியார்களும் பக்தர்களும் காத்திருந்தனர் ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் கோயிலின் கதவுகளை பூட்டு போட்டு பூட்டிக்கொண்டு கோயில் நிர்வாகம் முகத்தில் அடித்தார் போல் அவர்களை துரத்தி அடித்தது.
கோயிலின் கதவைப் பூட்டி திருக்கல்யாணத்தை நடத்துமாறு, திருக்கோவில் செயல் அலுவலர் செயல்பட்டுள்ளார். சிறிய அளவில் கூடி நின்று தங்களை கோயிலுக்கு உள்ளே அனுமதிக்குமாறு கெஞ்சிக் கொண்டிருந்த பக்தர்களுக்கு அழுகையும் அவமானமே மிஞ்சியது ஆனால் ஆலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் உரிய இடைவெளியோடு 500 பேர் அமரலாம் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றுதான்
தங்களை கொரோவனா அச்சம் என்று காரணம் காட்டி கோயிலுக்குள் நுழைய விட மறுத்த திருக்கோயில் நிர்வாகத்தினையும், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர காவல் துறையையும் பார்த்து பக்தர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்ட வண்ணம் இருந்தனர்
நேற்று முதலமைச்சர் நெல்லை வரும் போது இருபதாயிரம் பேரை திரள விட்டு வேடிக்கை பார்த்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர காவல்துறை, தகுந்த இடைவெளியுடன் அமர்ந்து தங்கள் உணர்வுப் பூர்வமான தெய்வத்தின் திருக்கல்யாண உற்ஸவத்தைக் காண்பதற்கு தடை விதித்து கோவிலை அடைத்த அவலத்துக்காக சபித்துத் தீர்த்தனர். அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு ஆலயத்தின் மண்டபத்தில் இருந்த படியே சாபம் கொடுத்தனர்.
எடப்பாடிக்கு இருக்கும் செல்வாக்கு மரியாதை கூட நம்ம நெல்லையப்பருக்கு இல்லையே என்று அங்கலாய்த்தனர். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை! கொரோனாவை காரணம்காட்டி ஆலயத்தின் பல்வேறு விழாக்களை நடத்தாமல் தடுத்து வைத்திருந்த அறநிலையத் துறையிடம் பெரிய அளவில் போராடி உள்ளிருப்பு போராட்டங்களை எல்லாம் நடத்தி இந்து முன்னணியினரும் நெல்லையப்பர் ஆலய பக்தர்கள் குழுவினரும் இந்த திருக்கல்யாணத்தை நடத்த சம்மதிக்க வைத்திருந்தனர் காவல்துறையினர் ஒருபுறமும் மாவட்ட நிர்வாகம் இன்னொரு புறமுமாக இந்த பேச்சுவார்த்தைகளில் இருந்துகொண்டு திருக்கல்யாண உத்ஸவத்துக்கு அனுமதி கொடுக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருந்தன
அப்போது அறநிலையத் துறை அதிகாரிகள் வஞ்சம் வைத்து நாங்கள் உற்சவத்தை கோயிலுக்குள் நடத்திக் கொள்கிறோம் ஆனால் உங்கள் எவருக்கும் அதில் அனுமதி இல்லை என்று திட்டமிட்டு செயல்பட்டது போல்… இன்று காலை சம்பவங்கள் நடந்ததாக ஆலயத்தின் வெளியே காத்திருந்த பக்தர்கள் தங்கள் குமுறலை கொட்டித் தீர்த்தனர்
முன்னதாக, நெல்லையப்பர் திருக்கல்யாணத்திற்கு பக்தர்கள் கோவிலுக்குள் சென்று விடாமல் தடுக்க உதவி ஆணையர் தலைமையில் போலீஸார் பெருமளவில் குவிக்கப் பட்டிருந்தனர் அவர்களிடம் வாக்குவாதம் செய்த பலரும் நேற்று முதலமைச்சரை வரவேற்க ஆயிரகணக்கானோர் திரண்ட போது நீங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினர்.
திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைக்கும் கோவில் பட்டர்கள் தவிர வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை எனவே ஒப்புக்கு ஒரு நிகழ்ச்சியை நடத்துவது போல் ஆலயத்தினுள்ளே பக்தர்கள் தரிசனம் எவருமின்றி திருக்கல்யாண உற்சவம் உற்சவமாக இன்றி வெறும் சடங்காக நடத்தப்பட்டது
இதனால் பெரிதும் மன வேதனை அடைந்த தங்களுக்கு இறைவன் வேறு ஒரு வடிவில் காட்சி அளித்ததாக அங்கே கூடிய பக்தர்கள் மனம் வருந்தி கூறினர்
அருள்மிகு நெல்லையப்பர் அன்னை காந்திமதி அம்பாள் திருக்கல்யாண நிகழ்வை பக்தர்கள் காண விடாமல் வாயிலை பூட்டி காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் அறநிலையத் துறையும் சேர்ந்து அராஜகம் செய்த நிலையில் அதிகாலை 4 மணிக்கு குளித்து திருக்கோவிலுக்கு வந்திருந்த தொண்டர்கள் மனம் வெதும்பி இறைவா என்ன அநியாயம் உன் திருக்கல்யாண காட்சியை காண எங்களுக்கு அனுமதி இல்லையா என மன வேதனையோடு இருந்த நிலையில்…
நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு அருகில் உள்ள அருள்மிகு தொண்டர்கள் நாயனார் அன்னை கோமதி அம்பாள் திருக்கோவிலில் திருக்கல்யாண காட்சியளித்தார் எம்பெருமான்… என்று தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார் இந்த விழாவுக்காக பல்வேறு கட்டமாக போராடிய இந்து முன்னணியின் மாநில செயலாளர் கா.குற்றாலநாதன்.
நெல்லையப்பர் திருக்கோயில் திருக்கல்யாண காட்சி காண்பதற்காக அங்கே வாயிலில் நின்றிருந்த பக்தர்கள் அனைவரும் இதனால் சற்று ஆறுதல் அடைந்து அங்கு சென்று தரிசித்தனர் என்றும், தொண்டர்களுக்காக காட்சி கொடுத்தவர் என்பதால்தான் அங்குள்ள மூலவர் சுவாமியின் பெயரே தொண்டர் நாயனார் என்றும், நெல்லையப்பர் திருக்கோவிலுக்குள் செல்ல விடாமல் அடியார்களை தடுத்த அதிகார ஞான சூனியங்களுக்கு தெரியாது … எம்பெருமான் தன் பக்தர்களை ஒருபோதும் ஏமாற்றமடைய வைப்பதில்லை என்பது என்றவாறு தமது உணர்வுகளை அவர் கொட்டித் தீர்த்தார்.
அதிகாலை திருக்கல்யாணத்திற்கு அனுமதி அளிக்காத அறநிலையத்துறை திருக்கல்யாணம் முடிந்த பிறகு ஆலய சாதாரண தரிசனத்திற்கு 6:30 க்கு கதவுகளைத் திறந்து வைத்து கலெக்சனுக்காக ஸ்வைப் மெஷின்கள் உடன் காத்திருந்தனர் அதிகாரிகள் என்று அறநிலையத்துறையின் உள் நோக்கத்தை சுட்டிக் காட்டினார் குற்றாலநாதன்!