ஏற்கெனவே தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்கலாம் என அரசு நேரம் ஒதுக்கிக் கொடுத்துள்ள நிலையில், தீபாவளி அன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள மழை எச்சரிக்கை தீபாவளிக்கு பட்டாசு வெடித்து மகிழ்பவர்களின் மனத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், செப்.11 இன்று முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தொடங்கி இரண்டு வாரம் கடந்துள்ள நிலையில், கடந்த மூன்று நாட்களாக வறண்ட வானிலை நிலவியது. இந்நிலையில் இன்று முதல் 4 நாட்களுக்கு சென்னை முதல் தென்காசி மாவட்டம் வரை பெரும்பாலான மாவட்டங்களில், கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.
சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
தமிழகம் முழுதும் இன்று முதல் 14ஆம் தேதி வரை பரவலாக இடி, மின்னலுக்கு வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழையும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் நாளை கன மழையோ, மிக கனத்த மழையோ பெய்யும். மற்ற இடங்களில் மிதமான மழை பெய்யும்.
வரும் 13ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மறுநாள் அதாவது 14ம் தேதி, தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். உள் மாவட்டங்கள் சிலவற்றில் இடியுடன் கூடி மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று பல இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு ஏற்ப, சென்னையில் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. விவேகானந்தர் இல்லம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, சேப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் காலை முதலே சாரல் மழை பெய்தது.
சென்னை வானிலை ஆய்வு மைய கனமழை அறிவிப்பை தொடர்ந்து, நாளை மற்றும் வரும் 14ஆம் தேதிக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கனமழை பெய்தால், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, வருவாய் துறை மற்றும் பொதுப்பணி துறையினருக்கும் வானிலை மையம் தகவல் அனுப்பி உள்ளது.
மேலும், தமிழக கடலோர பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறது.
அதே போல், இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையில், இன்று முதல் வரும் 17 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கலில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
குறிப்பாக, கனமழையால் ஏற்படும் சவால்களை சமாளிக்கவும் அரசு தயார் நிலையில் இருக்கவும் தமிழகத்துக்கு இன்றும், நாளை மறுநாளும் (13ம் தேதி) மற்றும் 15 ஆம் தேதியிலும் மஞ்சள் அலர்ட் விடப் பட்டிருக்கிறது. 12ம் தேதி நாளை மற்றும் தீபாவளி தினமான 14 ஆம் தேதியில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப் பட்டிருக்கிறது.