
இலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறுவதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்றும், தென் மாவட்டங்களில் நாளை அதி கன மழை பெய்யும்’ என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தாழ்வு மண்டலமாகவும் பின் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. இது தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காரைக்காலுக்கு தென் கிழக்கே, 975 கி.மீ., துாரத்தில் நிலை கொண்டு உள்ளது. இது இன்று காலை புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில், நாளை மாலை இலங்கையை கடந்து, குமரி கடல் பகுதிக்கு நகரும்.
இதன் காரணமாக இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் நகரங்களில், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், நாளை ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்யும். புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர்,
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன மழையும் பெய்யும். தெற்கு கடலோர மாவட்டங்களிலும், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களிலும், மணிக்கு, 65 கி.மீ., வேகம் வரை, சூறாவளி காற்று வீசும் வாய்ப்புள்ளது.
தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கன மழை பெய்யும். சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில், மிக கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழையும் பெய்யும்.தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில், மணிக்கு, 75 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். வரும் 4ம் தேதி, மாநிலம் முழுதும் சில இடங்களில் மிதமான மழைபெய்யும்… என்று தெரிவிக்கப் பட்டுள்ளது!
காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக மாறும் நிலையில் அதற்கு, புரெவி என, பெயர் சூட்டப்படுகிறது. மாலத்தீவு நாட்டின் சார்பில் இந்த பெயர் வழங்கப்பட்டுள்ளது.
