
ரஜினி திறந்த புத்தகம்; எதையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை! ஆனால் அவர் சொன்னதை வெளியில் சொல்ல முடியாது! – என்று கூறினார் தமிழருவி மணியன்.
கட்சி தொடங்கிய பிறகு சர்ச்சைகளை சந்திப்பார்கள் சிலர். கட்சி தொடங்குவதற்காகவே சர்ச்சைகளை சந்தித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். கடந்த 1996இல் அவர் அரசியல் வாய்ஸ் கொடுத்து, தானும் அரசியல் ஆர்வம் உள்ளவர் என்று காட்டிக் கொண்டார். அவ்வாறு ரஜினி வாய்ஸ் கொடுத்ததன் வெள்ளிவிழா ஆண்டு இது.
கடந்த 25 வருடங்களாக வெறும் வாய்ஸ் மட்டுமே கொடுத்து, ஊடகங்களின் நாய்ஸ்க்கு வழிவகுத்துவிட்ட ரஜினிகாந்த், இதுவரையிலும் மக்களின் நம்பிக்கையை மட்டுமே மூலமாகக் கொண்டு அரசியல் வெள்ளிவிழா கண்டிருக்கிறார்.
தற்போது 2021 தேர்தல் வரும் நிலையில், களம் சூடுபிடித்துள்ளது. இப்போதும் ரஜினி வாய்ஸிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார் என்பதால், பொறுமை இழந்த பலர், எவ்வாறேனும் அவரை களத்திற்குள் இழுக்க வேண்டும் என்று போட்டி போட்டு வருகின்றனர்.
அவர்களில் ஒருவரான தமிழருவி மணியன் நேற்று ரஜினியை சந்தித்தார். அப்போது, தமிழகத்துக்கும் தமிழக மக்களின் நலனுக்காகவும் நீங்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும். விரைவில், கொரோனா தடுப்பு மருந்து வந்து விடும்; நோய் தாக்கம் குறைந்து விடும். உங்களுடைய உடல் நலனுக்கு ஊறு விளைவிக்காத வகையில் கட்சி தொடங்குவது பற்றி சிந்தியுங்கள் என ரஜினியிடம் கூறினாராம்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் தமிழருவி மணியன் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர், ரஜினி தன் உடல் நிலை குறித்து, அவர் வெளிப்படையாக சொல்லி விட்டார். தன் உடல் நிலை குறித்து தமிழக மக்களிடம் மறைத்து வாழ வேண்டிய அவசியம் ரஜினிக்கு எள்ளளவும் கிடையாது. அவரது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.
தமிழக மக்களின் நலனுக்காக அவர் என்ன நினைக்கிறாரோ, அதை இதுவரைக்கும் சொல்லியிருக்கிறார். அதே மாதிரி தன் உடல் நலனில் உள்ள பிரச்னைகளையும் அவர் கூறியிருக்கிறார்.
நான் அவரிடம் என்ன சொன்னேன் என்பதை, வெளியே சொல்ல முடியாது. கட்சி துவக்குவாரா, இல்லையா என்பதை ரஜினி சொன்னால் தான் தெரியும்.
நான் எந்த கோரிக்கையும் அவரிடம் வைக்கவில்லை. ரஜினி மீது எனக்கு அதிக அக்கறை உண்டு என்பதால் உங்கள் உடல் நலனை பார்த்துக் கொள்ளுங்கள்; அது தான் முக்கியம் என்று கூறினேன் என்று தெரிவித்தார் தமிழருவி மணியன்.