
தமிழகத்தில் அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட இயலாத நிலையில் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி, தீவிர கட்சி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும், தனிக்கட்சி தொடங்க வாய்ப்பில்லை, மன்னியுங்கள் என்றும் ரஜினி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அவருக்காக கட்சிப் பணி ஆற்றலாம் என்று ரஜினியால் நியமிக்கப் பட்ட தமிழருவி மணியன் தனது அறிக்கையை இன்று காலை வெளியிட்டார். அதில், தனது இறுதிக் காலம் வரை இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்னொரு நபரான அர்ஜுன மூர்த்தியும் இன்று பிற்பகல் 3 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற மன உளைச்சலில் ரஜினிகாந்த் தற்போது உள்ளார் என்று குறிப்பிட்டுள்ள அர்ஜுன மூர்த்தி, மருத்துவர்களின் பரிந்துரையை ஏற்று ரஜினி எடுத்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்; யாரும் ரஜினியின் முடிவை எதிர்த்து போராட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக மக்களின் நலனை ரஜினி எப்போதும் விட்டுத்தர மாட்டார் என்றும், ரஜினியின் மக்கள் சேவையில் உடனிருப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ள அர்ஜுன மூர்த்தி, எனக்கு மோடியும், ரஜினியும் இரண்டு கண்கள் என்றார்.
இந்நிலையில், இது குறித்து அர்ஜுன மூர்த்தி வெளியிட்ட அறிக்கை:
ரா அர்ஜுன மூர்த்தியாகிய என்னை மதிப்புக்குரிய திரு ரஜினிகாந்த் அவர்கள் மக்களுக்கு அறிமுகம் செய்யும்போது சொன்னதுபோலவே நான் மக்களுக்கு சேவை செய்வேன். அது மக்களை சார்ந்து இருக்கும். அவர் இதுவரையில் யாரையும் ஏமாற்றியது இல்லை.
அவரின் உடல்நிலை குறித்து யோசிக்கிறார் இருந்தாலும் அவரின் ஆசீர்வாதம் எனக்கு எப்போதும் உண்டு என்பதை உங்களிடம் தெரியப்படுத்துகிறேன். அவரின் ஆசைப்படி மக்களுக்கு நல்லது கிடைக்க நான் பாடுபடுவேன். நான் எந்த இடத்திலும் எந்த செயலிலும் மிக நேர்த்தியாக செயல்படுவேன்.
என்னை பொருத்தவரை இம்முறை ஒரு மாற்று அரசியல் வர வேண்டும். மக்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்க வேண்டும். அப்படி ஒரு செயலுக்கு திரு ரஜினிகாந்த் அவர்கள் என்னை முன்னிறுத்தி உலகிற்கு சொன்னார்கள். ஆனால் தற்போது உடல் நலம் குறித்து மருத்துவர்கள் சொன்ன காரணத்தால் கட்சியின் வேலைகள் செய்ய இயலாத காரணத்தால் அவர் அப்படி ஓர் அறிக்கையை வெளியிட்டார்.
மற்றபடி ஒரு நல்லாட்சி வேண்டும் என்பதில் அவர் மக்களில் ஒருவராக துணை நிற்பார். நான் அவருடன் என்றும் தொடர்ந்து செயல்படவே ஆசைப்படுகிறேன். மற்றவை கடவுளின் சித்தம் என்று ஒரு பத்திரிகை செய்தியை வெளியிட்டார்