June 23, 2021, 11:41 am
More

  ARTICLE - SECTIONS

  திருப்பாவை -16: நாயகனாய் நின்ற (பாசுரமும் விளக்கமும்)

  அம்ம நீ என்று கொள்ள வேண்டும். கண்ணே, மணியே என்று குழந்தையைக் கொஞ்சுவது போல மழலை மொழியில்

  andal-vaibhavam-2
  andal-vaibhavam-2

  ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை

  விளக்கவுரை: வேதா டி.ஸ்ரீதரன்

  ** நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
  கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
  வாயில் காப்பானே! மணிக்கதவம் தாழ் திறவாய்
  ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
  மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
  தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
  வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
  நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். (16)

  பொருள்

  ஆயர்குலத் தலைவன் நந்தகோபனின் மாளிகையைப் பாதுகாக்கும் காவலனே, ரத்தினங்கள் இழைக்கப்பட்ட தோரண வாயிலைக் காப்பவனே, கோபியர்கள் வந்திருக்கிறோம். மணிகள் நிரம்பிய கதவைத் திறப்பாயாக! மாயாவியான அந்த மணிவண்ணக் கண்ணன் எங்களுக்கு வரம் தருவதாக ஏற்கெனவே வாக்குறுதி தந்திருக்கிறான். உடல் தூய்மையுடனும் மனத் தூய்மையுடனும் அவனை நாடி வந்திருக்கிறோம். அவனுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடப் போகிறோம். இந்த சுப வேளையில் ‘அனுமதிக்க முடியாது’ என்று அபசகுனமாக எதுவும் சொல்லிவிடாமல் அன்புடன் கதவைத் திறப்பாயாக!

  andala
  andala

  அருஞ்சொற்பொருள்

  நாயகனாய் – ஆயர்குலத் தலைவராக விளங்கும்

  கோயில் – அரண்மனை

  கொடித்தோன்றும் (கொடி தோன்றும்) – கொடிகள் கம்பீரமாகக் காட்சியளிக்கும்

  மணிக்கதவம் – ரத்தினங்கள் பதிக்கப்பட்ட கதவுகள்

  ஆயர் சிறுமியரோமுக்கு – ஆயர் சிறுமிகளான எங்களுக்கு

  அறைபறை – வரம் தருவதாக

  மணிவண்ணன் – நீல மணி (ரத்தினம்) போன்ற நிறத்தை உடையவன்

  நென்னலே – நேற்றே (முன்னரே)

  துயிலெழப் பாடுவான்  – திருப்பள்ளி எழுச்சி பாடுவோம்

  முன்னமுன்னம் மாற்றாதே – எடுத்த எடுப்பிலேயே மறுத்து விடாதே

  நேய நிலைக்கதவம் – நேசமாய்ப் பிணைந்திருக்கும் வாயிற் கதவுகள்

  கோபுர வாசல் என்பது ஆலயம், அரண்மனை முதலானவற்றின் வெளி வாசலையும், தோரண வாயில் என்பது த்வஜ ஸ்தம்பத்துக்கு அடுத்ததாக இருக்கும் உள் வாசலையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.

  கோயில் காப்பானே என்று சிறுமிகள் அழைத்ததும், வெளி வாசலைக் காக்கும் காவலாள் கண்ணசைவால் அவர்களை அனுமதித்தானாம். அதைத்தொடர்ந்து ஆயர் சிறுமிகள் கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே என்று உள் வாசலைக் காக்கும் காவலாளை விளிக்கிறார்களாம். இது உரையாசிரியர்கள் தரும் விளக்கம்.

  வாயால் முன்னமுன்னம் மாற்றதேயம்மா நீ –

  ‘வாயிற்காப்போனின் முகவாயைப் பிடித்துக் கெஞ்சுவது போல இறைஞ்சினார்கள்’ என்பது உரையாசிரியர்கள் தரும் விளக்கம்.

  அம்மா நீ –

  அம்ம நீ என்று கொள்ள வேண்டும். கண்ணே, மணியே என்று குழந்தையைக் கொஞ்சுவது போல மழலை மொழியில் காவலனைக் கொஞ்சலுடன் அழைக்கிறார்கள்.

  நேய நிலைக்கதவம் –

  ஆயர்பாடியில் ஜடப் பொருளான கதவுகள்கூட கிருஷ்ண பக்தியில் நேசமாய்ப் பிணைந்திருப்பதாகக் கொள்ளலாம்.

  பக்தி இல்லாதவர்களை உள்ளே விடாமல் தடுப்பதாலும், பக்தியுடன் உள்நுழைந்தவர்களை வெளியே விடாமல் கண்ணனுடன் பிணைத்து வைப்பதாலும் அது ‘நேய நிலைக்கதவம்’ என்பது உரையாசிரியர்கள் தரும் விளக்கம்.

  மொழி அழகு

  தூயோமாய் வந்தோம் என்பது உடல் தூய்மையையும் மனத்தூய்மையையும் ஒருங்கே குறிப்பது. ஆயினும், இந்தப் பாசுரத்தில் அது உள்ளுறை பொருளாக, ‘நோன்பின் நீராடல் மூலம் ஏற்பட்ட’ உடல் தூய்மையையும் உள்ளத் தூய்மையையும் குறித்தது என்று பொருள் கொள்ள வேண்டி உள்ளது. பாவை நோன்பின் முக்கிய அங்கமாக மார்கழி நீராடலைப் பேசும் ஆண்டாள், நீராட்டத்துக்காகத் தோழியரைத் துயிலெழுப்புகிறாள். அதன் பின்னர், நீராடலைப் பற்றி எதுவும் சொல்லாமல், நந்தகோபன் அரண்மனை வாசலுக்கு வருவதைப் பற்றிப் பாடுகிறாள். எனவே, தூயோமாய் வந்தோம் என்பதன் மூலம் மார்கழி நீராடல் முடிந்து விட்டது என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

  andal-srivilliputhur-1
  andal-srivilliputhur-1

  ஆன்மிகம், தத்துவம்

  அறைபறை நென்னலே வாய் நேர்ந்தான் –

  எங்களுக்கு அறைபறை தருவதாக நேற்றே வாக்களித்தான் என்று அவள் சொல்வதை மேம்போக்காகப் பார்த்தால், அவனிடம் சிறு மத்தளம் வாங்கிப்போக வந்ததாகத் தெரியும். ஆனாலும், இதன் உள்ளுறை பொருள் வேறு.

  ஸ்ரீராம பட்டாபிஷேகத்தைக் காண மகரிஷிகள் வந்திருந்தனர். ஞானத்தில் திளைத்திருந்த அவர்கள் மனதில் அப்போது ஓர் ஏக்கம் பிறந்தது. ஞானம் என்பது பேரின்பம். உலகாயத இன்பங்களின் அடிப்படையில் அதைப் புரிந்து கொள்ளவே முடியாது. ஞானம் அடைந்தவர்கள் உலகின் இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்.

  அத்தகைய ஞானிகளின் மனதிலும் ஏக்கம் பிறந்தது. இதோ பரமாத்மாவே மானுட சரீரம் தரித்து வந்திருக்கிறானே, இவனுக்குக் கைங்கர்யம் பண்ணும் பேறு லக்ஷ்மணன், அனுமன், விபீஷணன் முதலானோருக்குத்தானே கிடைத்தது. பரமாத்மனின் சரீரத்தைத் தொட்டுத் தொண்டூழியம் செய்வதையும், அவனது பாத தூளியைத் தரிப்பதையும்விட ஞானம் தரும் பேரின்பம் பெரிதா என்று எண்ணி, ‘ஸ்ரீராமன் எங்களுக்கு அந்த பாக்கியத்தைத் தர மாட்டானா!’ என அவர்கள் ஏங்கினார்களாம். அவர்களது ஏக்கத்தைப் புரிந்து கொண்ட ராமன், தனது அடுத்த அவதாரமான கிருஷ்ணாவதாரத்தில் அவர்களுக்கு அந்த பாக்கியத்தைத் தருவதாகத் தனது மனதுக்குள் ஸங்கல்பம் செய்து கொண்டான். அந்த மகரிஷிகள்தான் ஆயர்பாடியில் கோபிகைகளாக அவதரித்தனர் என்பது ஐதிகம்.

  ஸ்ரீராமனால் வெளிப்படையாகச் சொல்லப்படாத இந்த ஸங்கல்பத்தை ”நென்னலே வாய் நேர்ந்தான்” என்று ஆண்டாள் வெளிப்படையாகத் தெரிவிக்கிறாள். ‘போன ஜன்மத்தில் மகரிஷிகளாக இருந்தபோது எங்களுக்கு அவன் வாக்குறுதி கொடுத்தான். அதை இப்போது அவன் நிறைவேற்றுவான்’ என்பது இதன் உள்ளுறை பொருள்.

  ஞானியருக்கு மறு பிறவி கிடையாது. ஆனால், இந்த மகரிஷிகளோ அவனது பாத ஸ்பரிசத்துக்காக ஜன்மம் எடுத்தவர்கள்.

  மகரிஷிகள் ஞானத்தில் நிலைபெற்றவர்கள். ஆனால், ஆயர் சிறுமியரோ அறியாமை மிக்கவர்கள். வலக்கைக்கும் இடக்கைக்கும் கூட வேறுபாடு தெரியாதவர்கள்.

  மகரிஷிகளோ உடல், மனம் ஆகியவற்றின் இழுப்புகளைத் துறந்து பரமாத்மனுடன் ஐக்கியம் பெற்றுப் பேரின்பத்தில் நிலைபெற்றவர்கள். ஆனால், ஆயர் சிறுமிகளோ கண்ணனின் கண் பார்வைக்கும், புன்சிரிப்புக்கும் ஏக்கமாய் ஏங்கிக் கிடந்தவர்கள். அவனோ மகாமாயன். இவர்கள் வீடுகளில் புகுந்து, பாலையும் தயிரையும் வெண்ணெயையும் திருடித் தின்று குறும்பு செய்து பொழுது போக்கியவன்.

  ஆனால், இந்தக் குறும்புப் பயலும் ஒரு வாக்குறுதி கொடுத்தான்.

  பிருந்தாவனத்தில் கோபிகைகள் கண்ணனை அடைவதற்காகக் காத்யாயினி நோன்பு மேற்கொண்டனர். நோன்பை முன்னிட்டு கோபிகைகள் நீராடிக் கொண்டிருந்தபோது அவர்களது ஆடைகளைத் திருடிய குறும்புக்கார கிருஷ்ணன் கடம்ப மரத்தின்மீது ஏறிக்கொண்டான். அவன் போட்ட நிபந்தனைகளுக்கெல்லாம் கட்டுப்பட்ட கோபிகைகள் தங்களது ஆடை தொலைந்த வெட்கத்தையும் துறந்தனர். உடல் சார்ந்த, மனம் சார்ந்த பிணைப்புகளை மட்டுமல்ல, குடும்பம், சமூகம் சார்ந்த பிணைப்புகளையும் விட்டு அவனைச் சரணடைந்தனர்.

  அவர்களது நோன்பின் பலனை அவர்களுக்குத் தருவதற்கு முன்னோட்டமாகவே அவன் இந்த லீலையை நிகழ்த்தியது.

  இதைத்தொடர்ந்து பகவான் அவர்களது வெட்கம் துறந்த நிலையைப் பற்றியும், தன்மீது அவர்கள் வைத்திருக்கும் பிரியத்தின் இயல்பு பற்றியும் விளக்குகிறான்.

  ”என்னைப் பற்றிய நினைவுகளில் மூழ்கி நிற்கும் காதலும், என் உடல் மீது வைக்கப்படும் காமமும் ஜீவர்களைப் புலனின்பத்தில் மூழ்கடிக்காது. வாணலியில் வறுக்கப்பட்ட விதை தனது முளைப்பாற்றலை இழந்து விடுவது போல, என் மீது வைக்கப்படும் அன்பானது காமத்தின் புலன் தேட்டத்தை இழந்து விடும்” என்பதே அவன் தந்த விளக்கம்.

  கோபிகைகளுக்குச் சொல்வதுபோலச் சொல்லப்பட்டாலும், அது சகல ஜீவர்களுக்கும் அந்தப் பரமாத்மன் கொடுத்த வாக்குறுதி. ”நென்னலே வாய் நேர்ந்தான்” என்பதன் மூலம் ஆண்டாள் இதையும் சுட்டிக் காட்டுவதாகக் கொள்ளலாம். ஏனெனில், கோபிகைகளின் நோன்புக்கான பலனைத் தருவதாக அவன் அப்போது வரம் கொடுத்தான். விரைவிலேயே ஒவ்வொரு கோபிகையுடனும் அவன் நாட்டியமாடிய ராசலீலை மூலம் அந்த வரத்தை நிறைவேற்றவும் செய்தான்.

  பரீக்ஷித்துக்கு சுகப்பிரம்மம் பாகவதத்தை உபதேசம் செய்கிறார். அதில் ராசலீலை பற்றி உபதேசம் செய்யும்போது, பரீக்ஷித் மன்னன் சுகப்பிரம்மத்திடம் கேள்வி கேட்கிறான்: ”மகரிஷியே, கோபிகா ஸ்திரீகள் ஸ்ரீகிருஷ்ணனை பரப்பிரம்மமாக அறியாமல் வெறும் உடல் ஆசையால் அவன் மீது பிரியம் வைத்தனர். இப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்களுக்கு அமரத்துவம் கிட்டியது எப்படி?”

  இதற்கு சுகப்பிரம்மம், ”குரோதத்தால் கண்ணனையே நினைத்து அவனுடன் போர் புரிந்த சிசுபாலனுக்கு வீடுபேறு கிட்டியதை உனக்குச் சொன்னேனே. பகைமை பாராட்டியவனுக்கே வீடுபேறு கிட்டினால், ப்ரேமை காட்டும் கோபிகைகளுக்கு ஸத்கதி கிடைக்காதா, என்ன?

  ”அரசே, பரமன் அவதாரம் எடுப்பதே ஜீவர்களுக்கு நற்கதி கொடுப்பதற்காகத்தான். காமம், காதல், கோபம், பயம், நட்பு, அவனுடன் ஐக்கியமாதல், பக்தி முதலான எந்த வகை மனோநிலையாக இருந்தாலும் சரி, ஸ்ரீஹரி ஒருவன் மீது மட்டும் மனதை நிலைநிறுத்துவோர் ஹரிமயமாகவே ஆகி விடுகிறார்கள்” என்று விளக்கம் தருகிறார்.

  ”நென்னலே வாய்நேர்ந்தான்” என்பதன் மூலம் கிருஷ்ணாவதாரத்தில் காத்யாயினி நோன்புக்கான பலனைக் கொடுத்ததை நினைவூட்டும் ஆண்டாள், பாவை நோன்புக்கும் அவன் உரிய பலன் தருவான் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறாள்.

  ”என்னைச் சரணடைந்தவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்” என்று விபீஷண சரணாகதியின் போது ஸ்ரீராமன் வாக்குறுதி கொடுக்கிறான். கிருஷ்ணாவதாரத்தின்போது ஸர்வ தர்மான் பரித்யஜ்ய என்ற கீதா சுலோகத்தில், ”எல்லா அறங்களையும் விடுத்து என் ஒருவனையே பற்றி நிற்பாயாக. உன்னைப் பீடித்த தளைகளை நீக்கி உனக்கு வீடுபேற்றை வழங்குவேன்” என்ற வாக்குறுதியைத் தருகிறான். வராஹ அவதாரத்தின்போது தாயாருக்குச் செய்த உபதேசத்திலும் இதேபோல வாக்குத் தருகிறான்.

  (இந்த மூன்று சுலோகங்களும் சரம சுலோகங்கள் எனப்படும். வைணவ தீட்சையான பஞ்ச ஸம்ஸ்காரத்தின் போது இவற்றில் ஏதாவது ஒன்று உபதேசிக்கப்படும்.)

  முந்தைய அவதாரங்களில் அவன் தந்த வாக்குறுதியை ”நென்னலே வாய்நேர்ந்தான்” என்பதன் மூலம் நம் அனைவருக்கும் நினைவூட்டுகிறாள், ஆண்டாள். ஜீவர்களாகிய நமக்கு இதன் மூலம் ஆண்டாள் ஒரு சேதி சொல்கிறாள்: ”அவன் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியது அவன் பொறுப்பு. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவனைச் சரணடைவது மட்டுமே” என்பதே அவள் சொல்லும் சேதி.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  [orc]

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  24FollowersFollow
  74FollowersFollow
  1,262FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-