
கொளத்தூர், சேப்பாக்கம், காட்பாடி, திருச்சி மேற்கு, திருவண்ணாமலை ஆகிய தொகுதியில் திமுக பணம் பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதால் தேர்தலை நிறுத்த வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி திமுக பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,
அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பாபு.முருகவேல் ஆகியோர் புகார் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் “கொளத்தூர், சேப்பாக்கம், காட்பாடி, திருச்சி மேற்கு, திருவண்ணாமலை ஆகிய தொகுதியில் திமுக பணம் பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அவர், செயற்கை வெற்றி பெற வேண்டும் என்று திமுக போராடி வருகிறது என்றார்.
எனவே மேற்கண்ட இந்த 5 தொகுதியிலும் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார். சன் டிவியில் தொடர்ச்சியாக தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் தொடர்பான செய்திகளை ஒளிப்பரப்பி வருவதாக கூறிய அவர், சன் டிவியை தடை செய்ய வேண்டும் என்றும் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய சாகு பணம் பறிமுதல் செய்யப்பட்ட தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்வது தொடர்பான முடிவை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும் என தெரிவித்தார்.
இதனிடையே திருச்சி மேற்கு, கரூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 7 தொகுதிகளில் தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதாகவும், இதற்கான ஆலோசனையில் தில்லியில் உள்ள அலுவலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பணப்பட்டுவாடா நடந்த 5 முதல் 7 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பான அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக வாய்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.