தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர் வசந்தபாலன் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா 2ஆவது அலையின் தீவிரம் மிகக் கொடூரமாக உள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆல்பம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் வெயில் படம் மூலம் கவனம் ஈர்த்தவர்.
தொடர்ந்து அங்காடித்தெரு திரைப்படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநராக மாறினார். .
அரவான், காவியத்தலைவன் ஆகிய படங்கள் வியாபார ரீதியில் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட, தனித்துவமான இயக்குநர் என்ற பெயருக்கு சொந்தக்காரர் வசந்தபாலன்.
தற்போது இவர் இயக்கியுள்ள ஜெயில் திரைப்படம் ரிலீஸூக்கு தயாராக உள்ளது. அதற்கான புரொமோஷன் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்
ஆதலால் யாருடைய தொலைபேசி அழைப்பையும் எடுக்க முடியவில்லை என்று கூறியுள்ள வசந்தபாலன், பேரன்பு கொண்ட நண்பர்கள், மருத்துவர்கள், உறவினர்கள் சூழ இருக்கிறேன் என்பதே மனதிற்குள் ஆயிரம் யானை பலம் கூடி வருகிறது என தெரிவித்துள்ளார்.
வசந்தபாலன் மார்ச் 23ஆம் தேதி கொரோனஆ தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.