dead body
dead body

அரியலூரில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு வந்த இளைஞர் அங்கு மீன் குழம்பு சாப்பிட்டுவிட்டு வாந்தி எடுத்த சிறிது நேரத்தில் மரணமடைந்தார். இதுகுறித்து மீன்சுருட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவரும் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்தார்கள்.
இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது.

அவர்களின் காதலுக்கு பெற்றோர் பச்சைக் கொடி காட்டினர். இவர்களுக்கு வரும் 17 ஆம் தேதி திருமணம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கொரோனாவின் 2ஆவது அலை காரணமாக வேலை பார்த்த அலுவலகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனால் சென்னையிலிருந்து திருமணம் நிச்சயிக்கப்பட்ட அந்த பெண்ணின் வீட்டிற்கு நிஷாந்த் வந்துள்ளார். அப்போது வருங்கால மாப்பிள்ளைக்கு தடபுடலாக விருந்து பரிமாறப்பட்டது. அதில் மீன் குழம்பு பிரதான இடம் பெற்றிருந்தது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

மீன் குழம்பை நிஷாந்த் திருப்தியாக சாப்பிட்டுள்ளார். பின்னர் சிறிது நேரம் பெண்ணின் குடும்பத்தினருடன் நிஷாந்த் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென நிஷாந்த் வாந்தி எடுக்க ஆரம்பித்துள்ளார். இதையடுத்து அவரை அந்த பெண்ணும் அவரது பெற்றோரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு நிஷாந்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து நிஷாந்தின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending