
சத்தியமங்கலம் அடுத்த திம்பம் ஆசனூர் அருகே காட்டுயானை குட்டியுடன் சாலையை வழிமறித்து நின்றதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மான், யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
தற்போது கொரோனா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக மைசூர் செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால், அவ்வப்போது வனவிலங்குகள் சாலையோரம் நடமாடி வருகின்றன.
இந்த நிலையில், நேற்று ஆசனூர் சீவக்காய் பள்ளம் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டுயானை, தனது குட்டியுடன் சாலையில் நின்று தீவனம் உட்கொண்டு இருந்தது.
இதை கண்டு அச்சமடைந்த வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களை ஆங்காங்கே சாலையில் நிறுத்தி விட்டு யானை வனப்பகுதிகள் செல்வதற்காக காத்திருந்தனர்.
குட்டியுடன் சாலையில் உலாவிய காட்டுயானை, சுமார் அரை மணிநேரம் கழித்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. அதனை தொடர்ந்து, வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஓட்டிச்சென்றனர். நீண்டநேரம் சாலையை வழிமறித்து நின்ற யானையால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது