
கொரோனா தொற்றால் இறந்ததாகக் கூறி அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உயிருடன் வீட்டுக்கு வந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஜக்கய்யாபேட்டை பகுதியைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டி கிரிஜம்மா. இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 12-ம் தேதி சேர்க்கப்பட்டார்
.இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 12-ம் தேதி அவர் உயிரிழந்துவிட்டதாக, உறவினர்களுக்குத் தகவல் அளித்த மருத்துவமனை நிர்வாகம், உடலை சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.

இதையடுத்து உறவினர்கள் முன்னிலையில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி, கிரிஜம்மா உடல் அங்குள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
மறுநாள் கிரிஜம்மாவின் மறைவை முன்னிட்டு உறவினர்கள் பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், கிரிஜம்மா வீட்டிற்கு வந்துள்ளார். இதனைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றிலிருந்து தாம் குணமடைந்து வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, கிரிஜம்மா இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தவறான தகவல் அளிக்கப்பட்டு, வேறொரு உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.