ஒரு நாள் அவசர அவசரமாக திரிலோக சஞ்சாரியான நாரதர், வைகுண்டத்தை நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்தார்.
அவர் சென்ற வழியில் விஷ்ணு பக்தனான ஒரு கிராமத்தான் அவரைப் பார்த்துவிட்டான்.
அவன் நாரதரை இடைமறித்து நலம் விசாரிக்கவே அவர் அவசரமாக வைகுண்டத்துக்குப் போவதாகக் கூறினார்.
கிராமத்தான் நாரதரிடம் ஒரே கெஞ்சலாகக் கெஞ்சினான், “ஐயா, சாமி எனக்கும் கல்யாணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் எனக்கு குழந்தை பாக்கியமே இல்லை, எப்போது எனக்குக் குழந்தை பிறக்கும்? என்று விஷ்ணுவிடம் கேட்டு வாருங்கள்.”என்று கேட்டுகொண்டான்..
கிராமத்தானும் விஷ்ணு பக்தன் என்பதால் நாரதர் அவன் கோரிக்கையை மறுக்கவில்லை.
வைகுண்டம் போனவுடன் விஷ்ணுவை வழிபட்ட பின்பு மறக்காமல் விஷ்ணு பக்தனான கிராமத்தானின் கோரிக்கையை விஷ்ணுவிடம் தெரிவித்து பதில் கேட்டார்.
விஷ்ணு கொடுத்த செய்தி நல்ல செய்தி இல்லை. அப்படியே கிராமத்துக்கு வந்து, ‘’அப்பனே உனக்கு இப் பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை’’ என்று விஷ்ணு சொல்லிவிட்டார் என்றார்.
அந்த கிராமத்தானுக்கு முன்னைவிட பக்தி அதிகரிக்கவே அந்த ஊருக்கு வந்த ஒரு சந்நியாசிக்குப் பணிவிடை செய்து அவரை குருவாக ஏற்றான்.
அவர் அவனது பக்தியை மெச்சி, அவனுக்கு மூன்று குழந்தைகள் பிறக்கும் என்று ஆசிர்வதித்தார்.
பல ஆண்டுகள் உருண்டோடின. நாரதர் அதே கிராமத்தின் வழியாக மீண்டும் வைகுண்டம் போய்க் கொண்டிருந்தார்.
கிராமத்தானைப் பார்த்தபோது மூன்று குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்டார்.
அவனிடம் சென்று கேட்டபோது குருவின் திருவருளில் குழந்தை கிடைத்ததை அவன் கூறினான்.
வைகுண்டம் சென்ற நாரதர், கோபத்தோடு விஷ்ணுவை ஏசினார். ‘’ஏன் பொய் சொல்லி, என் பெயரையும் கெடுத்தீர்கள்?’’ என்று கடிந்தார்.
என்ன நடந்தது? ஏன் இவ்வளவு கோபம்? என்று விஷ்ணு கேட்கவே , குழந்தையே பிறக்காது என்று என்னிடம் சொல்லி அனுப்பிய கிராமத்தானுக்கு ‘’எப்படி ஐயா மூன்று குழந்தை பிறந்தது?’’ என்று சத்தம் போட்டார்.
விஷ்ணுவோ சிரித்துக் கொண்டே, “அட, அவன் யாராவது ஒரு குருவின் காலில் விழுந்திருப்பான். அவனுக்குக் குழந்தை பிறந்திருக்கும். குரு ஒருவருக்கே விதியை மாற்றும் சக்தி உண்டு? இது என்ன உனக்குத் தெரியாதா?” என்று போட்டார் ஒரு போடு!
வள்ளுவனும் கூட குருவின் பெருமையை, இரண்டு அதிகாரங்களில் , இருபது குறள்களில் சொல்லி இருக்கிறார்.
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல் (குறள் 443)
ஏந்திய கொள்கை உடையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும் (குறள் 899)
உயர்ந்த கொள்கை உடைய பெரியோர்களை பகைத்துக் கொண்டால் அரசனே ஆனாலும் கெட்டு அழிவது உறுதி.
குருர் பிரம்மா, குருர் விஷ்ணோ, குருர் தேவோ மஹேஸ்வர:*
*குருஸ் சாக்ஷாத் பரம் பிரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம: