வேளாண் சட்ட விவகாரத்தில் முரண்டு! ஆளுநருடன் மல்லுக் கட்டி… தீர்மானத்துடன் நிறுத்திக் கொள்ள தீர்மானித்த ஸ்டாலின்!

சற்றுமுன் தமிழகம்
governor purohit - 2026

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை சட்டமன்றக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில், ஆளுநர் உரையில் இடம்பெறச் செய்ய திட்டமிட்ட ஸ்டாலினின் எண்ணம் நிறைவேறவில்லை. ஆளுநருடன் மல்லுக்கட்டி, இறுதியில் சட்டமன்றத் தீர்மானத்துடன் நிறுத்திக் கொள்ளத் தீர்மானித்தார் ஸ்டாலின்.

வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிராக வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும்-முதலமைச்சர் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர் தமிழரசி, மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

governor speech in tn assembly - 2026

அப்போது விளக்கமளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல், அந்த சட்டங்கள் திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள உழவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

குடியுரிமை திருத்த சட்டத்தையும் திரும்ப பெறும் தீர்மானமும் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

இதனிடையே, ஆளுநர் உரையில் திருத்தம் அனுமதித்த பிறகே, ஆளுநர் சட்டமன்றத்தில் உரை அளித்தார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த ஆளுநர் உரை இரு தினங்களுக்கு முன் ஆளுநரிடம் வழங்கப்பட்டது. அதில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதை வாசிக்க ஆளுநர் மறுத்துவிட்டார்.

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு நேரடியாக ஆளுநர் மாளிகைக்கு வந்து ஆளுநரிடம் பேசினார். ஆனாலும் ஆளுநர் தன் முடிவில் உறுதியாக இருந்தார். தலைமைச் செயலாளர் அங்கிருந்தபடி முதல்வரிடம் பேசினார்.

நீண்ட நேர ஆலோசனைக்குப் பிறகு அந்த வாசகங்களை நீக்க முதல்வர் ஸ்டாலின் சம்மதித்துள்ளார். அதைத் தொடர்ந்து மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பான வாசகங்கள் நீக்கப்பட்டு புதிய ஆளுநர் உரை அவசரமாக தயாரிக்கப்பட்டு அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.

அதை ஏற்று சட்டசபைக்கு வர ஆளுநர் சம்மதித்துள்ளார். ஆளுநர் வாசித்த உரையில் வேளாண் சட்டங்கள் குறித்த வாசகங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.