
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தை சார்ந்தவர் ஆறுமுகம்.
இவரது மகன் பாலமுருகன் (வயது 31). பாலமுருகனுக்கும் – பட்டுக்கோட்டை அருகேயுள்ள திட்டக்குடி கிராமத்தை சார்ந்த துரை என்பவரின் மகள் தமிழழகிக்கும் (வயது 26) கடந்த 3 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இருவருக்கும் தற்போது வரை குழந்தைகள் இல்லை.
இந்நிலையில், பாலமுருகன் சிங்கப்பூரில் பணியாற்றி வரும் நிலையில், தனது மாமனார் – மாமியாருடன் தமிழழகி வசித்து வந்துள்ளார்.
இந்தப் பெண்ணின் வாழ்க்கையில் சில ஆண்களால் விதி விளையாடத் தொடங்கியிருக்கிறது.
இதே கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களுடன் இந்தப் பெண்ணுக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் பெண்ணின் பாலியல் பலவீனத்தை இவர்கள் பயன்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இவர்களில் ஒருவன் பதினெட்டு வயதுகூட நிரம்பாதவன் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த விஷயங்கள் எல்லாம் யாருக்கேனும் தெரியுமோ, இல்லையோ? இவ்வளவு காலமாகப் பிரச்னை என்று எதுவுமில்லாமல்தான் இருந்திருக்கிறது.
ஏதோவொரு தருணத்தில் இந்தப் பெண் கருவுற்றதாகவும் மூன்று மாதங்களாகிவிட்ட நிலையில் இதனால் பெரும் இக்கட்டில் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பிறக்கப் போகும் குழந்தைக்குத் தந்தை யார்? வெளிநாட்டிலிருக்கும் கணவரையும் குடும்பத்தினரையும் எதிர்கொள்வது எவ்வாறு? என்றெல்லாம் யோசித்துப் பெரும் மன நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார் அந்தப் பெண்.
பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் இளைஞர்களில் ஒருவரும் அவரை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை, கழற்றி விட்டிருக்கின்றனர். விபரீதமான இந்த உறவுச் சிக்கலில் யார்தான் என்ன முடிவு எடுப்பார்கள்?
இந்த நிலையில் பெண்ணுக்குத் தெரிந்த ஒரே தீர்வு – தற்கொலை.
கடந்த 4 ஆம் தேதி இரவு தமிழழகி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு, தூக்கில் பிணமாக இருந்த தமிழழகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தமிழழகியின் தற்கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதற்குள்ளாக, தமிழழகியின் தந்தை தனது மகள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துள்ளார் என்றும், அவரது மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரணை நடந்த வேண்டும் என்றும் துரை திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த தகவலை அறிந்த தஞ்சாவூர் உதவி ஆட்சியர் பாலசந்தர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். பேராவூரணி அரசு மருத்துவமனையில் தமிழழகியின் உடல் பிரேத பரிசோதனை செய்கையில், அவரது உள்ளாடையில் கடிதம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.
இந்த கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர், 3 பேரின் பெயர்களை தமிழழகி எழுதி வைத்திருப்பதை அறிந்துள்ளனர்.
தமிழழகி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பெயர்கள் குறித்து விசாரணை செய்கையில், அவர்கள் ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தை சார்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் ஆகாஷ் (வயது 21), தேநீர் கடை நடத்தி வரும் கண்ணன் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 28) மற்றும் 15 வயது சிறுவன் என 3 பேரை கைது செய்தனர்.
தமிழழகியின் தற்கொலைக்கு காரணமாக இருந்த 3 பேரின் மீதும் தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இப்போதைக்குத் துண்டுச்சீட்டைத் தவிர எந்த ஆதாரமும் இல்லை. உடல் கூறாய்வு அறிக்கை வந்த பிறகுதான் பெண் கருவுற்றிருந்ததாகக் கூறப்படுவது பற்றியோ அதற்குக் காரணம் யார் என்பது பற்றியோ தெரியவரும். அதன் பிறகுதான் வழக்கின் திசைவழி தெரியும். பிறகு வழக்கு விசாரணை எல்லாம் நடைபெறும்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.