தொழில்: திருமணத்தை தடுத்தல்! வியாபாரி போட்டோவுடன் போஸ்டர் அடித்து ஒட்டிய இளைஞர்கள்!

Published:

marriage poster - 2026

வருகின்ற திருமண சம்பந்தங்களை முடக்குகின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் திருமணம் ஆகாத வாலிபர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்” என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் கன்னியாகுமரி அருகே பரபரப்பு ஏற்பட்டது.

சமீப காலமாக இளைஞர்கள் வரன் பார்ப்பதும், வரன் சம்பந்தமாக பெண் வீட்டார் இளைஞர்களின் சொந்த ஊரில் விசாரிக்க செல்லும்போது ‘டீக்கடை பெஞ்ச் ஆசாமிகள்’ புறம் பேசி வரன்களை தடுப்பதும் தொடர்கதை ஆகி வருவதாக புலம்புகின்றனர் கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்கள்.

இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் ‘வரன்களை தடுக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி… இப்படிக்கு திருமணம் ஆகாத வாலிபர் சங்கம்’ என்று போஸ்டர் ஒட்டும் நிகழ்வு அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில், புது ட்ரெண்டிங்காக குளச்சல் அருகே அயினி விளை, பிச்சன் விளை பகுதி இளைஞர்கள் ஒருபடி மேலே சென்று, அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வரும் முதியவர் ஒருவரின் புகைப்படத்தை போஸ்டர் அடித்து ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த போஸ்டரில், திருமணம் விலக்குவோர் சங்கத் தலைவர் என்று அந்த முதியவரின் பெயரைக் குறிப்பிட்டு, தொழில்: திருமண வரன் தடுத்தல் என்றும் உப தொழில் பலசரக்கு வியாபாரம் என்றும் சுய விபர குறிப்போடு, “வருகின்ற திருமண சம்பந்தங்களை முடக்குகின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் திருமணம் ஆகாத வாலிபர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்” என்ற வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

போஸ்டர் விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட பலசரக்கு கடை வியாபாரி கூறுகையில், ”நான் 50 வருடங்களுக்கு மேலாக இந்த பகுதியில் பலசரக்குக் கடை நடத்தி வருகிறேன்.

எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உள் நோக்கத்தோடு சில வாலிபர்கள் இந்த செயலை செய்துள்ளனர்.

இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இதுகுறித்து கருங்கல் காவல் நிலையத்தில் புகாரளித்ததோடு மான நஷ்ட வழக்கும் தொடரப் போகிறேன்” என்று கூறினார்.

Related articles

Recent articles

spot_img