
தென்காசி மாவட்டம், தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவிலுக்கு மிக அருகில், கோயிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தை, அதை பராமரித்து வந்த நபரிடம் இருந்து பெற்று, இஸ்லாமியர்கள் அதைத் தொழுகைக் கூடமாக மாற்றி, தொழுது வந்தனர்.
இந்தக் கட்டடத்தை புனரமைக்க அனுமதி கேட்டு இஸ்லாமியர்கள் சார்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதில் எந்த புனரமைப்புப் பணிகளும் அதில் மேற்கொள்ளக் கூடாது என்றும், இப்போது இருக்கும் நிலையே தொடர வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் தி.மு.கவைச் சேர்ந்த இஸ்லாம் மதத்தை சார்ந்த நபர் ஒருவர், இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கு ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் காசி விஸ்வநாதர் திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் இருக்கும் அந்த தொழுகை பள்ளிவாசலை புனரமைக்க இந்துக்களிடம் சமாதான குழு ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கடிதம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எனவே தென்காசி நகரில் தற்போது நிலவி வரும் அமைதியான சூழலுக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக கடிதம் எழுதி அதை சமூக ஊடகங்களில் பரப்பியவர்களைக் கண்டித்தும், மேற்படி தொழுகை இடம் சம்மந்தமாக கிடைக்கப் பெற்ற நீதிமன்ற உத்தரவை என்றென்றும் காத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது.
இந்தக் கோரிக்கை மனுவை இந்து முன்னணி இயக்கத்தின் சார்பாக அதன் நிர்வாகிகள், காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் சமர்ப்பித்து, மனுவை வைத்து கூட்டு பிராத்தனை செய்து, அந்த மனுவை தமிழக முதல்வர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் V.P.ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன், வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத்தலைவர் சாக்ரடீஸ், தென்காசி மாவட்ட தலைவர் ஆறுமுகச்சாமி, மாவட்ட துணைத் தலைவர் முருகன், மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் பால்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, வழக்கறிர் பிரிவு மாவட்ட பொதுச்செயலாளர் வெங்கடேஷ், செங்கோட்டை ஒன்றிய தலைவர் குளத்தூரான், செயலாளர் பூபதி, கடையநல்லூர் ஒன்றிய தலைவர் கார்த்திக், தென்காசி நகர தலைவர் நாராயணன், துணை தலைவர் சொர்ண சேகர் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.