ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா. இவர் திருவாடானை அருகேயுள்ள ஆர்.எஸ்.மங்களத்திலிருந்து தனது சொந்த ஊர் செல்வதற்காக பேருந்தில் ஏறி வந்துள்ளார்.
பஸ்ஸில் அமர்ந்து பயணம் செய்யும்போது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சிதா (27) மற்றும் மாரி (36) ஆகிய இருவரும் சரோஜா உடன் அறிமுகமாகி வெகுநாட்களாக பழகிய தோழிகள் போல சகஜமாக பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில் மூவரும் நயினார்கோவில் பேருந்து நிலையத்திற்கு பேருந்து வந்ததும் இறங்கி சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்ற நிலையில் தற்செயலாக தனது கழுத்தை பார்த்துள்ளார் சரோஜா.
அப்போது தனது கழுத்தில் அணிந்திருந்த ஆறு சவரன் தங்க செயினை காணாமல் போனது தெரியவந்தது. உடனே அவர் தன்னுடன் பேருந்தில் பயணம் செய்த அந்த இரு பெண்கள் மீது சந்தேகம் அடைந்து உள்ளார்.
சுதாரித்துக்கொண்ட அவர் பேருந்து நிலையத்தை சுற்றி அவர்களைத் தேடிப் பார்த்தபோது பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு மளிகை ஸ்டோரில் பொருட்கள் வாங்குவது போல் நின்று கொண்டு இருந்துள்ளனர்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் சரோஜா. இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அந்தப் பெண்களை பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் 6 சவரன் தங்கச் செயின் இருந்தது தெரியவந்தது.
உடனடியாக அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்து அவர்களிடமிருந்து 6 சவரன் தங்க செயினை மீட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், பேருந்தில் ஏறும், இறங்கும் பயணிகளிடம் நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை திருடுவது விசாரணையில் தெரியவந்தது.
அவர்கள் இருவரும் கூட்டமாக இருக்கும் பேருந்தில் பயணம் செய்வார்களாம். அப்போது ஓரளவு நகை அணிந்த பெண்களின் அருகில் நின்று கொண்டோ அல்லது இருக்கையில் அமர்ந்து கொண்டோ பயணம் செய்வார்களாம்.
அப்போது அருகில் இருக்கும் பெண்களிடம் மெதுவாக பேச்சுக்கொடுத்து ரொம்ப நாட்களாக பழகியதுபோல பேசி நைசாக நெருங்கி அவர்களின் கவனத்தை திசை திருப்பி நகையை திருடுவது பழக்கமாம்.
அதிலும் ஒருவர் பேச்சு கொடுத்து அருகில் இருக்கும் பெண்ணின் கவனத்தைத் திசை திருப்பிவிடுவதும், மற்றொருவர் நகையை அபேஸ் செய்வதில் கவனமாக இருந்து கூட்டு திருட்டு செய்வார்களாம்.
சில நேரங்களில் பேருந்துக்குள் சில்லரைகளை சிதறவிட்டு அதை தேடுவதுபொல் நடித்து, பயணிகளின் கவனம் திசை திரும்பும்போது பயணிகள் வைத்திருக்கும் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிவிட்டு தப்பிச் சென்றுவிடுவார்களாம்.