நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே வான் ஆய்வகத்தின் அலுவல்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு படம் வெளியிடப்பட்டிருந்தது.
அந்தப்படத்தில் தங்கத்தால் ஆன கை போன்ற ஒரு மூட்டம் இருந்தது.
அது ‘கடவுளின் கை’ (Hand of God) என்று சமூக ஊடகத்தில் பலரும் கூறி வருகின்றனர்.
கை போன்ற உருவத்தில் உள்ள அந்த ஒளி மூட்டம் என்ன என்பது குறித்தும் நாசா அந்த இன்ஸ்டாகிராம் பதிவிலேயே விளக்கமும் அளித்துள்ளது.
விண்மீன் ஒன்று வெடித்து சிதறிய பின்பு உண்டான பல்சர் (துடிப்பு விண்மீன்) ஒன்றால் உருவான ஆற்றல் மற்றும் துகள்களின் மூட்டமே தங்க நிறத்தில் கை போன்ற உருவமாக தெரிகிறது என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
PSR B1509-58 என்று பெயரிடப்பட்ட இந்த துடிப்பு விண்மீன் பின் மூலம் சுமார் 19 கிலோ மீட்டர் குறுக்களவு (விட்டம்) கொண்டது என்றும் அது நொடிக்கு சுமார் ஏழு முறை சுழல்கிறது என்றும் நாசாவின் சந்திரா வானாய்வகம் தெரிவிக்கிறது.
ஒரு மிகப்பெரிய விண்மீன் அது மேலதிகமாக இயங்குவதற்கான எரிபொருள் இல்லாமல் சிதைவடையும் பொழுது நியூட்ரான் விண்மீன்கள் உருவாகும் என நாசாவின் அதிக்காரபூர்வ இணையதளம் தெரிவிக்கிறது.
அந்த விண்மீனின் மையப்பகுதி சிதைவடைந்து அதில் இருக்கும் அனைத்து புரோட்டான்கள் (நேர் மின்மம் (positive charge) உடைய அணுவின் அடிப்படைத் துகள்கள்) மற்றும் எலக்ட்ரான்கள் (எதிர் மின்மம் (negative charge) உடைய அணுவின் அடிப்படைத் துகள்கள்) ஒன்றாக அழுத்தி நியூட்ரான்கள் (மின்மம் அற்ற (no charge)அணுவின் அடிப்படைத் துகள்கள்) ஆக மாற்றும்.
இதன் காரணமாக அவை நியூட்ரான் விண்மீன்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் நிறை (திணிவு) மிகவும் அதிகமாக இருக்கும். எந்த அளவுக்கு என்றால் பூமியின் நிறையைப் போல சுமார் ஐந்து லட்சம் மடங்கு அதிகமான நிறையை சுமார் 12 மைல் குறுக்களவுள்ள நியூட்ரான் விண்மீனில் அடைக்கப்பட்டிருக்கும் என்கிறது நாசா இணையதளம்.
பல நியூட்ரான் விண்மீன்கள் துடிப்பு விண்மீன்களாகவே அதாவது பல்சர்களாகவே காணப்படும்.
சீரான இடைவெளியில் கதிரியக்க துடிப்புகளை கொண்டுள்ள நியூட்ரான் விண்மீன்கள் பல்சர் (pulsar) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன.
இந்தத் துடிப்புகளுக்கு (pulses) இடையிலான கால இடைவெளி மில்லி நொடிகளிலிருந்து நொடிகள் வரை இருக்கும்.
துடிப்பு என்று பொருள்படும் ‘pulse’ எனும் ஆங்கிலச் சொல்லின் அடைப்படியிலேயே இவை ‘pulsar’ என்று பெயர்பெற்றன.
துடிப்பு விண்மீன்களுக்கு காந்தப்புலம் மிகவும் அதிகமாக இருக்கும். இந்த காந்தப்புலத்தின் இரு துருவங்களில் இருந்தும் அதிக எண்ணிக்கையிலான துகள்கள் வேகமாக வெளியேற்றப்படும்.
காந்தப்புலத்தின் துருவங்களில் இருந்து அவ்வாறு அதிக வேகத்தில் வெளியேற்றப்படும் துகள்களால் மிகவும் சக்திவாய்ந்த ஒளிக்கீற்று உண்டாகும்.
அவ்வாறு உண்டாகியுள்ள ஒளிக்கீற்றுதான் தற்போது நாசாவால் வெளியிடப்பட்டுள்ள இந்த படத்திலும் தெரிகிறது.