மேலூர் பேருந்து நிலையத்தில் மாணவர்கள், இளைஞர்கள் இடையே மோதல்: 30 பேர் மீது வழக்குப்பதிவு!
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து, சுற்றுவட்டார கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் மேலூர், பகுதிக்கு மாணவ, மாணவிகள், பொதுமக்கள் தங்களுடைய கல்வி, வேலை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், மேலூரில் இருந்து நாவினிப்பட்டி வழியாக செல்லக் கூடிய அரசு டவுன் பேருந்தில் செல்வது தொடர்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே பேருந்து நிலையத்திற்குள் வாக்குவாதம் ஏற்பட்ட மோதலாக மாறியது.
இதில் ஒருவரை, ஒருவர் விரட்டி, விரட்டி தாக்கிக்கொண்டனர். இதனால், பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்களும், மாணவ,மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து, தகவலறிந்து, அப்பகுதியில் பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் வந்த நிலையில், மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தப்பியோடிய நிலையில், இந்த மோதல் தொடர்பாக கல்லூரி படிப்பு முடித்த மேலூர் நாவினிப்பட்டியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரை கைது செய்யப் பட்டார்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், மற்றவர்களை அடையாளம் கண்டு 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலூர் பேருந்து நிலையத்தில், பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் என ஏராளமான பெண்கள் வந்து செல்லும் நிலையில், அவர்களை பார்ப்பது தொடர்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது!
இந் நிலையில், மேலூர் பேருந்து நிலையம், அதன் அருகேயுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியினை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.