தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியான அறிவிப்பு:
- மாநிலம் முழுவதும் நாளை (ஜன.,6) முதல் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
- இரவுநேர ஊரடங்கு நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை.
- மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி.
- அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ஏ.டி.எம் மையங்கள், சரக்கு வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும்.
- பெட்ரோல், டீசல் பங்குகள் 24 மணிநேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதி.
- உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதி. இருப்பினும், தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.
ஞாயிறு முழு ஊரடங்கு
- ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். இருப்பினும், அத்தியாவசிய பணிகளுக்கு அனுமதி.
- முழு ஊரடங்கின்போது பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் இயங்காது.
- முழு ஊரடங்கில் உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி.
- இரவு ஊரடங்கின் போது மற்றும் முழு ஊரடங்கின்போது விமானம், ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக செல்லும் மக்கள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும்போது, பயணச்சீட்டு வைத்து கொள்ள வேண்டும்.
நேரடி வகுப்புகளுக்கு தடை
*மழலையர் காப்பகங்கள் தவிர,மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை.
*அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9 ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.
*பொதுத்தேர்வு செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12 ம் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடக்கும்
*அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவ கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜன.,20 வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.
*பயிற்சி நிலையங்கள் செயல்பட தடை
*பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.
50 சதவீத பயணிகளுக்கு மட்டும் அனுமதி
*பொது பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களில் உள்ள இருக்கைகளில் 50 சதவீதம் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
*மெட்ரோ ரயில்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்
*அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது.
*அனைத்து பொழுதுபோக்கு/ கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை
*அனைத்து கடற்கரைகளிலும் பொது மக்கள் நடை பயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதி
வழிபாட்டிற்கு தடை
*அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை
*சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும்
*மீன் மற்றும் காய்கறி சந்தைகளில் குறிப்பாக வா ரஇறுதி நாட்களில் பொது மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மீன் மற்றும் காய்கறி சந்தைகள் அமைக்க சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
*தற்போது செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த பஸ் நிலையங்களில் இருந்து செல்லும் பஸ்களை மண்டலம் வாரியாக பிரித்து வெவ்வெறு இடங்களில் இருந்து பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
*கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், விணக வளாகங்கள், திரையங்குகள், அனைத்து சேவை துறைகள் போன்ற பொது மக்கள் செல்லும் இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள், உரிமையாளர்கள் அனைவரும் இரண்டுடோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும்
*அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் ஜன.,9 க்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி அதற்குண்டான சான்றினை தொடர்புடைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
*ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் இரவு நேர பணிக்கு செல்லும் போது தங்கள் அலுவலக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி செலுத்தி கொண்டமைக்கான சான்றிதழையும் வைத்து கொள்ள வேண்டும்.
100 பேருக்கு அனுமதி
*உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர்ந்து உணவருந்த அனுமதி
*திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகம் 100 நபர்கள் மட்டும் பங்கேற்க அனுமதி
*இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதி
*துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்
*கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுகள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்
*உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி
*அனைத்து திரையரங்குகளிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்
*திறந்த வெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்
*உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி பயிற்சியும் 50 சதவீத பார்வையாளர்களுடன் விளையாட்டுபோட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.
*அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்குகள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும்.
*அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவை ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.