spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்இதுவரை இல்லாத வகையில் ஆளுநரின் வாழ்த்துச் செய்தி..! தமிழகம் குறித்த ‘ஸ்பெஷல்’ பார்வை!

இதுவரை இல்லாத வகையில் ஆளுநரின் வாழ்த்துச் செய்தி..! தமிழகம் குறித்த ‘ஸ்பெஷல்’ பார்வை!

- Advertisement -

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களின் குடியரசுத் திருநாள் செய்தி

அன்புமிக்க எனது தமிழக சகோதர சகோதரிகளே, வணக்கம்.  மங்கலகரமான நமது 73ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, உங்கள் அனைவருக்கும் நிறைவான நல்வாழ்த்துக்களையும், என் இதயம் கனிந்த நல்லாசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

தேசம் 75 ஆண்டுக்கால சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவத்தையும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125ஆவது நூற்றாண்டையும், உற்சாகத்தோடும், உணர்ச்சிப் பெருக்கோடும், தேசிய பெருமிதத்தோடும் கொண்டாடி வருகிறது.  இந்த நாளன்று, சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அனைவரையும், அவர்களுடைய தியாகம் மற்றும் அவர்கள் அடைந்த துயர்களுக்காக அவர்களை நாம் மரியாதையோடு நினைவு கூர்கிறோம்.  வீரமங்கை வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ. சிதம்பரம் பிள்ளை, மஹாகவி சுப்பிரமணிய பாரதி, முத்துராமலிங்கத் தேவர், ஜானகி தேவர் இன்னும் பலருக்கும் நமது அஞ்சலிகளையும், நன்றிகளையும் காணிக்கையாக்குகிறோம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நாயகர்களும், உயிர்த்தியாகிகளும் நமது தேசிய விடுதலை இயக்கத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள்.   நமது நாட்டிலிருந்து காலனி ஆதிக்கத்தை வேரோடு களைந்தெடுக்கும் பொருட்டு, பிரிட்டிஷாருக்கு எதிராக நேதாஜியின் தலைமையின் கீழ் பலர் போரிட்டார்கள்.  இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த பல தைரியம் நிறைந்த தமிழ் வீரர்களும், ஆயிரக்கணக்கான அவர்களின் சந்ததியினரும், மாநிலத்தின் பல பாகங்களில் இருக்கின்றார்கள்.  தங்களுடைய உதிரம், வியர்வை மற்றும் தியாகங்கள் வாயிலாக நமக்கு சுதந்திரம் என்ற அமிழ்தினை அளித்த நாயகர்கள்-உயிர்த்தியாகிகளை அடையாளம் கண்டு, அவர்களை நாம் கௌரவப்படுத்த வேண்டும். 

நீண்ட காலமாக அவர்களையும், அவர்களின் பங்களிப்புக்களையும் நாம் புறக்கணித்தமைக்கு நாம் அவர்களிடம் மன்னிப்புக் கோரக் கடமைப்பட்டிருக்கிறோம்.  நமது வருங்கால தலைமுறையினருக்காக, இந்தத் தியாகிகளின் போராட்டங்களை நாம் கதைகளாக வடிக்க வேண்டும்; இதன் மூலம் கடுமையாகப் போராடிப் பெற்ற சுதந்திரத்தின் அருமைகளை நமது சந்ததிகள் புரிந்து கொள்வதோடு, உலகத் தலைவனாக, செழிப்பு நிறைந்த நாடாக, இராணுவபலம் மிக்கதாக, அறிவால் மேம்பட்டதாக, உலக சகோதரத்துவம் என்ற ஆதர்சத்தின் பால் ஆன்மீக அர்ப்பணிப்பு உடையதான, தியாகிகள் கண்ட கனவு பாரதத்தை உருவாக்குவதில் உத்வேகம் அடைய முடியும்.

நண்பர்களே, பல பன்முகத்தன்மைகள் தான் பாரத நாட்டின் அழகாகவும், பலமாகவும் இருந்து வந்திருக்கின்றது.  பல்லாயிரம் ஆண்டுகளாகவே, உலகளாவிய மனித ஒற்றுமை, ஒட்டுமொத்த படைப்போடு அதன் ஒருமை என்பதில் வேரூன்றிய நமது பகிரப்பட்ட கலாச்சார ஆன்மீகம் மற்றும் விழுமியங்களோடு, ஒற்றுமையாக, ஒரே குடும்பமாக நமது மக்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.  

இந்த விழுமியங்கள் நமது மண்ணிலே கலந்திருக்கிறது, கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீரம் வரை, கட்ச் தொடங்கி காமரூபம் வரை, ஒவ்வொரு இந்தியனின் அன்றாட வாழ்விலும் பிரதிபலிக்கிறது.

சுமார் 2000 ஆண்டுகள் முன்பாக, பண்புநலன்கள் நிறையப் பெற்ற மகான் திருவள்ளுவர், தெய்வீகப் பாடல்களை அருளி, புனித நூலான திருக்குறளை நமக்களித்தார்.  இந்த நிலவுலக வாழ்க்கை மற்றும் அதற்கு அப்பாலும் பற்றி திருக்குறளில் பொதிந்திருக்கும் ஞானம், பாரத நாட்டின் நித்தியமான ஆன்மீகத்தின் ஒரு ஊற்றுக்கண்ணாக விளங்குகிறது.

நமது சங்க இலக்கியங்கள், உலகின் மிகத் தொன்மையான உயிர்ப்பான இலக்கியம், அறிவுசார் மற்றும் ஆன்மீக பரிணாம வளர்ச்சியின் உச்சபட்ச நிலையை பிரநிதித்துவப்படுத்துவதோடு, பல தலைமுறை கவிஞர்கள், சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகள் ஆகியோருக்கு உத்வேகத்தை அளித்துத் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

உயரிய கம்பன், ஒவ்வொரு பாரத நாட்டவரின் இதயத்திலும் நித்தியமாக வாசம் செய்யும் ஸ்ரீ இராமனின் வாழ்க்கை சரிதமான இராமாயணத்தை நமக்கு அளித்திருக்கிறார்.

நண்பர்களே, நாம் உயர்வான நாயன்மார்கள், ஆழ்வார்கள், அவ்வை, ஆண்டாள் ஆகியோரின் பெருமைமிக்க செல்வங்கள்.  அவர்கள் அன்னை பாரதியின் செல்வங்களுக்குப் பல்லாயிரம் ஆண்டுகளாக உத்வேகம் அளித்ததோடு, இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து வழிகாட்டியும் வருவார்கள்.

சுதந்திரம் அடைந்தது முதல், நாம் பல நூற்றாண்டுக்கால காலனியாதிக்கம் ஏற்படுத்திய சிதைவுகளிலிருந்து பாரதத்தை உருவாக்கி வந்திருக்கிறோம்.   படையெடுப்பாளர்களும் ஆக்ரமிப்பாளர்களும் நமது மண்ணையும், மக்களையும், பொருளாதார-அரசியல் ரீதியாக சுரண்டியது மட்டுமல்ல, இயன்ற அளவுக்கு நமது தன்னிலையை, அதாவது நமது ஒற்றுமை மற்றும் பலத்தின் ஆதாரமாக விளங்கிய நமது மக்களின் பகிரப்பட்ட பாரத நாட்டவர் என்ற உணர்வையும், நமது பகிரப்பட்ட கலாச்சார ஆன்மீகத்தையும் அழிக்க முயற்சி செய்தார்கள்.   இந்த பகிரப்பட்ட கலாச்சார ஆன்மீகத்தை நிலைநிறுத்திய அமைப்புக்களை அழிக்க, அவர்களால் ஆன அனைத்தையும் செய்து, பிரதேச, இன, மொழி, சமய ரீதியிலான செயற்கையான பல பிரிவுகளை விதைக்கவும் செய்தார்கள்.

நாம் விடுதலை பெற்ற நாடாக ஆன பிறகு, நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு மனத்தின் அடியாழங்களில், காலனியாதிக்க ஆட்சியாளர்களால் செலுத்தப்பட்ட நஞ்சு குறித்தும், அதன் நீண்டகால அபாயகரமான விளைவுகள் குறித்தும் காந்தியடிகள் எச்சரித்திருந்தார்.  இது குறித்து நாம் விழிப்போடு இருப்பதோடு, நாமும் நமது சமூகமும் விஷமுறிவு செய்து கொள்வதை நோக்கி மும்முரமாகப் பணியாற்ற வேண்டும் என்றார்.  இந்த விஷமுறிவு என்பது நீண்டகாலச் செயல்பாடு என்றாலும், புதிய எழுச்சிமிகு பாரதத்தின் அடித்தளக் கற்களாக விளங்கும் சமூக நல்லிணக்கம் மற்றும் தேசத்தின் மீதான பெருமிதத்தை மீட்டெடுக்க இது மிகவும் அவசியம் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.  ஏதோ ஒரு காரணம் காட்டி, பாரதத்தின் எழுச்சியைத் தடைப்படுத்த முயலக்கூடிய, சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான பகை சக்திகளுக்கு எதிராக நாம் எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும்.

நண்பர்களே, கடந்த ஈராண்டுகளாக, உலகம் கோவிட் 19 பெருந்தொற்றின் கருநிழலின் பிடியில் உழன்று கொண்டிருக்கிறது.  இந்த கோவிட் பெருந்தொற்றுக்கு நம்மில் பலர் நமக்கு நெருக்கமானவர்களை பலி கொடுத்திருக்கிறோம்.  பலரின் வாழ்வாதாரம் பறிபோனது. 

ஆனால் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் சக்தி வாய்ந்த தலைமையின் கீழ், நமது மக்கள் அனைவரின் ஒத்துழைப்பு, உள்ளார்ந்த பலத்தின் துணையோடும், நமது முன்கள வீரர்களின் தியாகங்கள்-தன்னலமற்ற சேவை காரணமாகவும், நமது விஞ்ஞானிகள், அறிவியல் சமூகம் ஆகியோரின் அசாதாரணமான கடும் உழைப்பு மற்றும் விடாமுயற்சி வாயிலாகவும், நமது துணிவுள்ள தொழிலதிபர்கள், தொழில்முனைவோரின் முயல்வினாலும், இதுவரை காணாத இந்த உலகாயத நெருக்கடியையும், இதன் பாதகமான விளைவுகளையும், நூதனமான வழிகளில் நமது நாடு எதிர்கொண்ட விதம், முன்னேறிய நாடுகளுக்கும் ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது.

சாதனை நேரத்தில் நாம் வியக்கத்தக்க உடல்நலக் கட்டமைப்பு வசதிகளையும், விநியோக முறைகளையும் அடிமட்ட நிலையிலிருந்து உருவாக்கினோம், தடுப்பூசிகளை மேம்படுத்தியதோடு, கோவிட் மற்றும் உடல்நலம் தொடர்பாக அது ஏற்படுத்தும் விளைவுகளை எதிர்கொள்ள புதிய மருந்துகளையும் உருவாக்கினோம்.  செல்வச் செழிப்பு மிக்க, மேம்பட்ட நாடுகள் துரதிர்ஷடவசமாக இந்தப் பெருந்தொற்றை வியாபார வாய்ப்புக்களாகப் பார்த்து, தடுப்பூசி தேசியத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள்; ஆனால் உலக சகோதரத்துவம் என்ற நமது விழுமியங்களுக்கு ஏற்ப, நாம் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் தேவைப்படும் நபர்களுக்கு, வேக்சின் மைத்ரி முன்னெடுப்பின் கீழ் தடுப்பூசி உதவிக்கரம் நீட்டினோம்.

நமது நாடு கோவிட் 19இன் 3ஆவது அலையைக் கடந்து கொண்டிருக்கிறது.  தேவையான உடல்நல-மருத்துவ சேவைகளுக்கோ, மருத்துவக் கட்டமைப்புக்கோ, மருந்துகளுக்கோ எந்தத் தட்டுப்பாடும் கிடையாது.  தடுப்பூசியைப் பொறுத்த மட்டில் நாம் ஒரு உலக சாதனையை ஏற்படுத்தி இருக்கிறோம்.  நாம் அதிக தயாரிப்பு நிலையோடும், தன்னம்பிக்கையோடும், புதிய கோவிட் அலை மற்றும் அதன் திரிபுருக்களை எதிர்கொண்டு வருகிறோம்.

நண்பர்களே, சக்திவாய்ந்த, தொலைநோக்குத் தலைமையின் கீழ் நமது நாடு ஒரு முழுமையான புத்தெழுச்சியை அனுபவித்து வருகிறது.  ஆக்கப்பூர்வமான உணர்வு எங்கும் நிறைந்து, 2047ஆம் ஆண்டில் நாம் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளைக் கொண்டாடும் போது, உலகிற்கே தலைவனாகத் திகழும் பாரதத்தை உருவாக்கும் நமது மக்களின் உறுதிப்பாட்டை இந்த உணர்வு பிரதிபலிக்கிறது.   

பொதுமக்கள்-ஆரோக்கியம், சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு, ஆற்றல், பாலின சமத்துவம், அறிவியல் தொழில்நுட்பம் போன்றவற்றில் அசாத்தியமான இலக்குகள் அடையப்பட்டு விட்டன.   புதுமை படைத்தல் மற்றும் தொழில்முனைவில் நாம் சீராக புதிய சாதனைகளைப் படைத்துக் கொண்டு வருகிறோம்.  நமது ஸ்டார்ட் அப்புகள் உலகிற்கு வியப்பூட்டுகின்றன.  விரைவிலேயே 100க்கும் மேற்பட்ட யூனிகார்ன்களை, அதாவது ஒவ்வொன்றும் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள ஸ்டார்ட் அப்புகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

மனிதனை மட்டுமே மையமாகக் கொண்ட வாழ்க்கையும், இதன் விளைவான சில மேம்பட்ட நாடுகளின் இயற்கை மற்றும் இயற்கை வளங்களின் பொறுப்பற்ற பரவலான சுரண்டலும், நமது பூமியை இருத்தலியல் நெருக்கடிக்குத் தள்ளியிருக்கிறது. சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்குக் காரணமான நாடுகள், தங்கள் வழிமுறைகளை சீர் செய்ய இன்னும் முன்வரவில்லை. 

முழுமையான மனிதத்துவமான வசுதைவ குடும்பகம் மீதான அர்ப்பணிப்பும், முழுமையான படைப்பான சர்வே பவந்து சுகின, சர்வே சந்து நிராமயா, அதாவது அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும், நோய்நொடிகளின்றி இருக்க வேண்டும் என்பதன் மீதான அசையாத நம்பிக்கையும் உடைய பாரதம், நீடித்த இணக்கமான வளர்ச்சிக்கான வழிகளை செயல்படுத்திக் காட்டி வருகிறது. 

நமது மாண்புமிகு பிரதமரின் முன்னெடுப்பு காரணமாக உருவாக்கப்பட்ட, தொடர்ந்து விரிவடைந்து வரும் சர்வதேச சூரியசக்திக் கூட்டணி, புதுப்பிக்கவல்ல எரிசக்தி மீதான நமது உறுதியான அழுத்தம், 2070ஆம் ஆண்டிற்குள்ளாக பாரதத்தை கார்பன் இல்லா நாடாக மாற்றும் நமது துணிவான தீர்மானம் ஆகியன, அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் பேரழிவு மற்றும் ஒட்டுமொத்த அழிவிலிருந்து பூமித்தாயைப் பாதுகாக்க நமது மிகவுயரிய எடுத்துக்காட்டுக்கள்.

நண்பர்களே, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான உலகநாடுகள் வரிசையை, பாரதம் ஒரு அடிமை நாடாக இருந்த போது, பலம் வாய்ந்த நாடுகளாக விளங்கியவை உருவாக்கின, இது அநீதி உடையதாகவும், நீடித்த தன்மை இல்லாததாகவும் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.   இது நொறுங்கிக் கொண்டிருக்கிறது.  இது மேலும் நொறுங்கும்.  ஒரு புதிய உலக நாடுகள் வரிசை தொடுவானில் இருக்கிறது.

முக்கிய உலகாயத நெருக்கடியான பருவநிலை மற்றும் கோவிட் விஷயங்களில், பாரதம் தலைமையேற்று, இப்படிப்பட்டதொரு சங்கடத்தை எவ்வாறு வெற்றிகரமாக எதிர்கொள்வது என்பதை எடுத்துக்காட்டுகள் வாயிலாக வழிகாட்டியிருக்கிறது.  இந்த வேகமாக ஏற்பட்டு வரும் மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஒரு புதிய பாரதத்தைப் படைத்து, புதிய உலகநாடுகள் வரிசையில் அதற்குரித்தான இடம் நோக்கி இட்டுச் செல்ல, நமக்கே உரிய வழிகளில் நம்மாலான சிறப்பான செயல்பாட்டை ஆற்றுவது நம்மனைவரின் புனிதமான கடமையாகும்.

நண்பர்களே, நமது மாநிலமான தமிழ்நாடு முற்போக்கானது.  கோவிட் மேலாண்மையில், நாம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறோம்.   2021ஆம் ஆண்டின் மழை மற்றும் புயலின் இதுவரை காணாத பாதிப்புக்களைக் குறைக்க, நமது மாநில அரசு குறிப்பிடத்தக்க வகையில் செயலாற்றியிருக்கிறது.  முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் பல துறைகளில், தமிழ்நாடு பல மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாகவும், உத்வேகமளிப்பதாகவும் இருக்கிறது. 

நமது மனித மற்றும் தொழில்துறை மேம்பாட்டுக் குறியீடுகள் பாராட்டத்தக்கவை.  அடுத்தடுத்து வந்த மாநில அரசுகள் மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் வாயிலாகவும், மத்திய அரசின் ஆதரவு காரணமாகவும், சமூக நீதி, கல்விப் பரவல், உடல்நலப் பராமரிப்பு, நமது மக்களின் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வெற்றியை நாம் அடைந்திருக்கிறோம். 

தமிழ்நாட்டு மக்களின் சார்பாக, ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளைத் துவக்கி வைத்தமைக்கு, மாண்புமிகு பிரதம மந்திரிக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இது நாட்டிலே இதுவரை நிகழ்த்தப்படாத ஒரு சாதனை.

வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் மீது நமது நிலையை நாம் தொடர்ந்து, சீரான வகையில் மேம்படுத்தும் அதே வேளையில், சமூக நல்லிணக்கத்தைக் கட்டமைப்பதிலும், தரமான கல்வியை அளிப்பதிலும் நாம் நமது கவனத்தைச் செலுத்த வேண்டும்.

நமது அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவது காலத்தின் கட்டாயம்.  அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையேயான கல்வி வெளியீடுகளில் உள்ள எதிர்மறை வேறுபாடுகள் கவலைக்குரியதாக இருக்கின்றன.  ஏழைகளால் அதிக செலவு பிடிக்கும் தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க இயலாது.  அரசுப் பள்ளிகள் தான் அவர்களுடைய ஒரே நம்பிக்கை. 

நீட் தேர்வுகள் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக, அரசு பள்ளிகளில் படித்த 1 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிந்தது.  7.5 சதவீத அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு என்ற உறுதியான நடவடிக்கை காரணமாக, இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. 

ஆனாலும் கூட, அரசுப் பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான அவசரத் தேவை இருக்கிறது.  இதே போல, உயர்கல்வித் துறையிலும் கூட, ஒரு காலத்தில் நமது பல்கலைக்கழகங்கள் பெற்றிருந்த நற்பெயரை மீட்டெடுக்க நாம் கடினமாக உழைக்க வேண்டும்.

நண்பர்களே, உலகின் உயிர்ப்போடு இருக்கும் மிகத் தொன்மையான மொழி தமிழ்.  இலக்கிய, கலாச்சார, ஆன்மீக உள்ளடக்கம் மிகவுடைய தமிழ், பல பாரத நாட்டு மொழிகளுக்கு வளம் சேர்த்திருக்கிறது.  நாட்டின் பிற பாகங்களில் இது பரப்பப்படுவதை ஊக்கப்படுத்த வேண்டும். 

மாண்புமிகு பிரதமரின் முன்னெடுப்பு காரணமாக, மத்திய பல்கலைக்கழகமான பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி பேராசியர் பதவி ஒன்று, தமிழ் மொழியின் பரவுதலையும், ஆய்வினையும் முன்னெடுத்துச் செல்ல உருவாக்கப்பட்டுள்ளது.  இதே போன்ற முன்னெடுப்பு பிற மாநிலங்களின் பல்கலைக்கழகங்களிலும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.  நமது பல்கலைக்கழகங்களும் இந்தத் திசையில் முன்னெடுப்புக்களை மேற்கொள்ளலாம்.  தமிழின் வளத்தின் முழு ஆதாயத்தை நாடு அனுபவிக்க வேண்டும்.

நாட்டின் பிற பாகங்களில் தமிழ் மொழி பரப்பப்பட வேண்டும் என்பது முக்கியமானதாக இருக்கும் அதே வேளையில், நமது பள்ளிக் மாணவர்களும், பிற மாநில மாணவர்களைப் போல, பிற இந்திய மொழிகளைக் கற்பதும் முக்கியமானதாகும்.  நமது மாணவர்களுக்கு, பிற இந்திய மொழிகளைக் கற்கும் வாய்ப்பை மறுப்பது அனைவருக்கும் நியாயமற்றதாகும். 

சகோதரத்துவம், சிறப்பான பரஸ்பர நன்மதிப்பு, மொழியியல் அறிவுசார் மற்றும் கலாச்சார வளம் கூட்டல் ஆகியன, அனைவரையும் வளப்படுத்துவதோடு, நமது இணக்கமான வளர்ச்சிக்கான பல சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தியளிக்கும்.

மஹாகவி பாரதியின் அறைகூவலை நினைவில் கொள்வோம் –

பாரத மாதா, செப்பு மொழி பதினெட்டுடையாள், எனில், சிந்தனை ஒன்றுடையாள்.

நண்பர்களே, கடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு பாரதத்தின் ஆன்மீகத் தலைநகரம் ஆகும்.  நமது வாழ்க்கையில் பக்தி அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியுள்ளது.  நாட்டிலேயே மிக அதிகமான கோயில்கள் அடர்ந்தது நமது மாநிலம்.  சில, கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. 

இவை உயிர்ப்பு நிறைந்த கோயில்கள்.  இவை தாம் நமது விலைமதிப்பில்லாத கலாச்சார ஆன்மீகப் பாரம்பரியங்கள்.  உலகின் பிற பண்டைய நாகரீகங்கள் காலத்தின் பனிமூட்டத்திலும், வரலாற்றின் பக்கங்களிலும் மறைந்து விட்டன; இவற்றில் சில, தடயங்கள் ஏதும் இல்லாமல் மறைந்த நிலையில், எண்ணற்ற வலிமையான எதிர்ப்புக்களை மீறி நமது நாகரீகம் பிழைத்திருக்கிறது. 

இந்த வாழும் பாரம்பரியம் அறிவுரீதியாக மலைப்பையும், உணர்வுரீதியாக அடக்க உணர்வையும் அளிக்கிறது.  இத்தகைய ஈடு இணையற்ற வளமான பாரம்பரியத்தைப் பாதுகாத்து நமக்கு அளித்த, நமது முன்னோர்களை நினைந்து நாம் பெருமிதம் அடைகிறோம்.  இத்தகைய வியக்கத்தக்க பாரம்பரியத்திற்குத் தகுதி படைத்தவர்களாக நாம் இருக்க வேண்டியது நமது புனிதமான கடமை. 

ஏதோ சில சடங்குகள் செய்யப்படும், கற்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகள் அல்ல நமது பண்டைய கோயில்கள்.  நமது தூலமான, உணர்வுரீதியான, ஆன்மீக அடையாளத்தின் வாழும் சின்னங்கள் இவை.   இவற்றின் தூலமான, உணர்வுரீதியான, ஆன்மீக முழுமைத்தன்மையோடு, போதுமான கவனம், நம்பிக்கை மற்றும் முழு ஈடுபாட்டோடு இவை பாதுகாத்துப் பராமரிக்கப்பட்டாக வேண்டும். 

நண்பர்களே, சுதந்திரம் அடைந்த தசாப்தங்கள் அனைத்திலும், குடிமக்கள் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு மீது நாம் அழுத்தமளித்து வந்திருக்கிறோம்.  நமது கடமைகள் குறித்தும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது. 

இந்த மங்கலமான வேளையில், நமது அரசியலமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் பால் நமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, நமது தேசத்தின் சிறப்பான நலன்களை முன்னிறுத்தி, நமது அனைத்துக் கடமைகளையும் ஆற்றுவோம் என்ற புனிதமான உறுதிப்பாட்டை மேற்கொள்வோம்.

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதியன்று, மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 139ஆவது பிறந்த நாளை ஒட்டி, மஹாகவிக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம், ராஜ் பவன் ஆதரவில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்களைப் பாராட்ட இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.  

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரைப் போட்டி, பள்ளி மாணவர்களுக்கானது, கல்லூரி-பல்கலைக்கழக மாணவர்களுக்கானது என, இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது.  பள்ளி மாணவர்களுக்கான கட்டுரையின் தலைப்பு, இந்திய விடுதலைக்கு மஹாகவி சுப்பிரமணிய பாரதியின் பங்களிப்பு.  கல்லூரி-பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைப்பு, மஹாகவி பாரதியாரின் கனவு இந்தியா.

மாணவர்களின் உற்சாகமான பங்கெடுப்பு எனக்கு பேருவகையை அளிக்கிறது.  போட்டியில் மாநிலமெங்கும் இருந்து 7000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள்.  கட்டுரைகளின் தரம் கருத்தைக் கவரக்கூடிய வகையில் இருந்ததாக, வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவினர் என்னிடத்தில் தெரிவித்தார்கள். 

பள்ளிப் பிரிவின் வெற்றியாளர்கள்

தமிழில்,

குமாரி கே. ராகவி, 11ஆம் வகுப்பு மாணவி, அரசுப் பள்ளி, கிருஷ்ணாபுரம், தர்மபுரி மாவட்டம்.

ஆங்கிலத்தில்,

செல்வன் ஜே. எஸ். கவின் இன்பத்தமிழ், 7ஆம் வகுப்பு மாணவன், செட்டிநாடு பப்ளிக் பள்ளி, காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்.

கல்லூரி-பல்கலைக்கழகப் பிரிவின் வெற்றியாளர்கள்

தமிழில்,

திரு. எஸ். துரைசாமி, 2ஆம் ஆண்டு மருத்துவப்படிப்பு மாணவன், அரசு மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி.

ஆங்கிலத்தில்,

குமாரி ஆர். வாசுகி, 2ஆம் ஆண்டு இளங்கலை (ஆங்கில இலக்கியம்), மதராஸ் கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம், சென்னை.

பள்ளிப் பிரிவின் வெற்றியாளர்களுக்குத் தலா ஒரு இலட்சம் ரூபாய் பரிசும் சான்றிதழும், கல்லூரி-பல்கலைக்கழகப் பிரிவின் வெற்றியாளர்களுக்குத் தலா இரண்டு இலட்சம் ரூபாய் பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்.

வெற்றியாளர்களுக்கு நான் பாராட்டுக்களையும், இதில் பங்கெடுத்த அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  இவர்கள் ஊக்கமுடையவர்களாக இருக்க வேண்டும்.  எதிர்காலத்தில் மேலும் வாய்ப்புகள் ஏற்படும்.  கோவிட் நிலை மேம்படும் போது, ராஜ் பவனில் நடைபெறும் ஒரு விழாவில் வெற்றியாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்படுவார்கள்.

இந்த மங்கலமான தருணத்தில், உங்கள் அனைவருக்கும் வாழ்க்கையில் சிறந்தவை அனைத்தும் வாய்க்கப் பெற நான் மீண்டும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க தமிழ்!! ஜெய் ஹிந்த்!!

2 COMMENTS

  1. excellent message. excellent translation. It should reach each and every citizen of Tamil Nadu. After reading this message, I think, His Excellency the governor, should regularly update the people of Tamil Nadu through his messages, may be once a month, to keep the people of Tamil Nadu informed of the true things happening in India, as a country; otherwise people of Tamil Nadu will not get the right news items for the future generation. Thanks once again for the posting

  2. திருப்பூர் குமரன் மற்றும் வாஞ்சிநாதன் அவர்களையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe