
கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 முதல் 12ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால், நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று முதல் முழுமையாக செயல்பட உள்ளன.
எனவே பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா குறித்த அச்சம் இன்னும் இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது. அவர்களுக்கு பள்ளி வகுப்புகள் நேரடி அல்லது ஆன்லைன் முறையில் நடத்தப்படும். எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்பதை அந்தந்த பள்ளி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம்.
நேரடி வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பள்ளிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது,
பள்ளிக்கு வரும் மாணவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். வாய், மூக்கை மூடும் வகையில் முகக்கவசத்தை அனைத்து நேரங்களிலும் அணிந்திருக்க வேண்டும்.
அடிக்கடி கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
வகுப்பறையில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணக் கூடாது.
பள்ளிகளுக்கு வரும்போது அவர்களின் உடல் வெப்பநிலையை சோதனை செய்யவேண்டும். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே அவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
ஆசிரியர்களுக்கும், 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்.
குழுவாக அமர்ந்து உணவு உண்ண அனுமதிக்கக் கூடாது.
தினமும் பள்ளி வளாகத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகைதரக் கூடாது.
பள்ளி வளாகங்களில் எச்சில் துப்புவதைத் தடுக்க வேண்டும்.
மாணவர்கள் வருவதற்கும், வெளியில் செல்வதற்கும் தனித்தனியாக வழிகளை உருவாக்கலாம்.
பள்ளிகளில் ஆன்லைன் அல்லது நேரடி வகுப்புகள் நடத்துவதை அந்தப் பள்ளியின் நிர்வாகம், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து முடிவு செய்துகொள்ளலாம் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இந்த வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதைச் சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியிட்டுள்ளது தேர்வுத்துறை.
அதன்படி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 9ம் தேதி முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரையும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 9ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையும் முதல்கட்ட திருப்புதல் தேர்வு நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகிறது.
அதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு பிப்ரவரி 18 முதல் 22 ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.





