
பிரபல நடிகர் பிரவீன் குமார் சோப்தி மாரடைப்பால் காலமானார்..
அவருக்கு வயது 74.
1988 இல் பி.ஆர்.சோப்ராவின் கிளாசிக் ‘மஹாபாரத்’ திரைப்படத்தில் பீமாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரவீன் குமார் சோப்தி.
நடிகர் மட்டுமின்றி, விளையாட்டு, அரசியல்வாதி என பன்முக திறமை கொண்டவர்.. இவர் 50-க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கெல் மதன காமராஜன் படத்தில் பீம்பாய் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்த பீம்பாய் கதாப்பாத்திரத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அவிநாசி என்ற் கதாப்பத்திரத்தில் நடித்திருந்த நாகேஷை பீம் பாய் ஒரே கையில் தூக்கி செல்லும் இன்று வரை பிரபலமாக உள்ளது.

விளையாட்டு வீரரான இவர், ஆசிய அளவில் நடத்தப்பட்ட பல போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பல விருதுகளையும் வென்றுள்ளார்.
பிரவீன் குமார் சுத்தியல் மற்றும் வட்டு எறிதலில் பல்வேறு தடகள நிகழ்வுகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 1966 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் இரண்டு தங்கப் பதக்கங்கள் உட்பட 4 பதக்கங்களை வென்றார். 1966 காமன்வெல்த் போட்டியின் போது சுத்தியல் எறிதலில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.
இதனிடையே 2013-ல் தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட பிரவீன் குமார் அந்த தேர்தலில் தோல்வியடைந்தார். இதையடுத்து, 2014ல், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
இதனிடையே அவர் நீண்ட நாட்களாக மார்பு தொற்று பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மருத்துவரை வழவழைத்து அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. எனினும் இரவு 10.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் காலமானார். அவருக்கு மனைவி, மகள், இரண்டு இளைய சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர்.
அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்