பரபரப்பானசூழலில் நகர் புற உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் எண்ணும் பணி இன்று துவங்கியது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 15,158 வாக்குச்சாவடிகளும், நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 8,454 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன. இந்தத் தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை துவங்கி மும்மரமாக நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வார்டு வாரியாக முழுமையாக எண்ணப்பட்டு அறிவிக்கப்படும். முதல் சுற்று முடிவு, முன்னணி நிலவரம் உடனுக்குடன் அறிவிக்கப்படுகிறது.
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கைது, எதிர் கட்சி தலைவரின் பரபரப்பான பேட்டியால் பரபரப்பு நிலவியது.இதனால்
வாக்கு எண்ணிக்கைக்காக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
பகல் 12 மணியளவில், வெற்றி நிலவரங்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிக்கப்படுகிறது.
வாக்கு எண்ணும் பணியில் ஒரு மேற்பாா்வையாளா், ஓா் உதவியாளா் நியமிக்கப்பட்டுள்ளனா். வாக்கு எண்ணிக்கை விவரங்களை தோ்தல் அலுவலருக்கு தெரிவிக்க மாநகராட்சி, நகராட்சிகளில் 3 மேஜைக்கு ஓா் உதவியாளா், பேரூராட்சிக்கு ஓா் உதவியாளா் நியமிக்கப்பட்டுள்ளனா். மாநகராட்சிகளில் ஒரு வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 நுண் பாா்வையாளா்கள், நகராட்சி, பேரூராட்சிகளில் ஓா் அறைக்கு ஒரு நுண் பாா்வையாளா் என மொத்தம் சுமாா் 30 ஆயிரம் அலுவலா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். வாக்குகள் எண்ணப்பட்டு வாா்டு வாரியாக வெற்றி பெற்றவா்கள் விவரம் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும்.
268 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் அசம்பாவிதத்தை தடுக்க மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. தடையில்லா மின்சாரம், கணினி, இணையதள வசதி, காவல் துறை, வாக்கு எண்ணிக்கை அலுவலா்களுக்கு உணவு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேட்பாளா்கள், முகவா்கள் காலை 7 மணிக்கு வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைப்பேசிகள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.ஊடகவியலாளா்கள் மற்றும் தோ்தல் அலுவலா்கள் கைப்பேசி கொண்டு வர அனுமதிக்கப்படுவா். மாவட்ட நிா்வாகம் வழங்கியுள்ள முகவா் அடையாள அட்டை கொண்டு வராதவா்களும், முகக் கவசம் அணிந்து வராதவா்களுக்கும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வருவதற்கு அனுமதி இல்லை.தோ்தல் முடிவுகளை இணையதள முகவரி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.






