Dhinasari Home page

நெல்லையில் அஜித் ரசிகர்கள் மீது தடியடி….

சற்றுமுன்

அஜித்குமார்  நடித்துள்ள வலிமை திரைபடம் இன்று வெளியான து. திருநெல்வேலி மாநகரில் 5 தியேட்டர்களில் வெளியானது.

ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி இன்று அதிகாலை 4 மணிக்கு நடந்தது. இதனை காண ஏராளமான ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர்.

நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் அதிகாலை 1 மணிக்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர்.
ஏற்கனவே தியேட்டர் முன்பு டிரம்ஸ் மற்றும் ஆட்டம் ஆடுவதற்கு சந்திப்பு போலீசார் தடை விதித்திருந்தனர்.

ஆனால் தடையை மீறி அங்கு ரசிகர்கள் மேளங்கள் இசைத்து நடனம் ஆடினர். இதனால் அங்கு திரண்டிருந்த ரசிகர்களை போலீசார் தியேட்டரை விட்டு வெளியேற்றினர்.

அதிகாலை 3 மணிக்கு பின்னரே தியேட்டருக்குள் நுழைய வேண்டும் என அறிவுறுத்தினர். அதனை கேட்காத ரசிகர்கள் தியேட்டர் முன்பு கூட்டமாக நின்றனர். சிலர் மோட்டார் சைக்கிள்களில் சாகசங்கள் நிகழ்த்தினர். இதனால் போலீசார் கூட்டத்தை கலைப்பதற்காக லேசான தடியடி நடத்தியுள்ளனர்.

அந்த நேரத்தில் பெரும்பாலான ரசிகர்கள் சாலையிலேயே தங்களது மோட்டார் சைக்கிள்களை விட்டு விட்டு ஓடிவிட்டனர். பின்னர் 4 மணிக்கு சிறப்பு காட்சி அமைதியாக நடந்தது. தியேட்டர்கள் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சேலம் ஏ ஆர் ஆர் எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் வலிமை படம் முதல் காட்சி தாமதமானதால் ரசிகர்கள் கோபத்தில் கூரையை உடைத்தனர். பின்பு திரையரங்க ஊழியர்கள் அதை சரிசெய்யும் பணியில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள கங்கா, யமுனா, காவேரி திரையரங்கின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

வலிமை படம் பார்க்க ரசிகர்கள் குழுமியிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனம் ஒன்று மட்டும் லேசாக சேதமடைந்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.