ஜெயேந்திரரை கைது செய்து அநீதி இழைத்ததால் ஜெயலலிதா மரணம் சர்ச்சைக்கு உள்ளாகியது: எஸ்.வி.சேகர் கருத்தால் கலகலக்கும் அதிமுக

சற்றுமுன் தமிழகம்

சென்னை:
குரு நிந்தனை செய்த சாபத்திற்கு பரிகாரம் கிடையாது, ஜெயேந்திரரை கைது செய்து அநீதி இழைத்ததால் தான் ஜெயலலிதா ஒரு பெட்டிக்குள் அடைபட்டுப் போனார் என்று கூறியுள்ளார் எஸ்.வி.சேகர். இது அதிமுக., வினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்திற்கு இதுதான் காரணம் என்று கூறியதால் எஸ்.வி.சேகருக்கு அதிமுகவினர் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பாஜக.,வைச் சேர்ந்தவரும் நடிகருமான எஸ்.வி.சேகர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டும் என்று சட்டம் கட்டாயப்படுத்தவில்லை. விஜயேந்திர சுவாமிகள் அதனால் தெய்வத்துக்கு கொடுக்கும் மரியாதையை, தியானம் செய்தபடி தமிழ்த் தாய்க்கு கொடுத்தார். அதனால் அவர் செய்ததில் தவறில்லை.

குரு நிந்தனை பாவம். பாவத்திற்கு பரிகாரம் உண்டு, ஆனால் சாபத்திற்கு பரிகாரம் கிடையாது. 2004ஆம் ஆண்டில் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சுவாமிகளை, ஜெயலலிதா அரசு கைது செய்தது. அதற்கு எதிர்வினையாகத் தான் அப்போது 2006ல் அவரது ஆட்சி போனது. அவ்வளவு தான் முடிந்து போச்சு. ராணி மாதிரி இருந்த ஜெயலலிதா மரணம் இன்று சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

பொதுவாக பிராமண சமுதாயத்தில் பிறந்தவர்களை எரியூட்ட வேண்டும். ஆனால் ஒரு டப்பாவில் போட்டு உள்ளே போட்டிருக்கிறார்கள். இதைத்தான் பாவத்திற்கு பரிகாரம் உண்டு, சாபத்திற்கு பரிகாரம் கிடையாது என்று கூறியதாக எஸ்.வி.சேகர் அந்த நிகழ்ச்சியில் பேசினார்.

அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஏற்கெனவே அதிமுக., எம்.எல்.ஏ.வாக கடந்த 2006ல் அதிமுக., சார்பில் போட்டியிட்டு வென்றார். ஆனால், அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானது, என்ன விஷயம் என்று ஜெயலலிதாவிற்கு சொல்ல ஒருவர் கட்சிக்குள் இருக்க வேண்டும் என்று நினைத்ததால்தான் என்று பேசினார் எஸ்வி.சேகர். அவரது இந்தக் கருத்தும் இப்போது அதிமுக.,வினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.