கேரளாவில் மீன்பிடி படகுகளை ‘எரிவாயு (காஸ்’)வாயிலாக இயக்கும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு உள்ளது. இங்கு, விரைவில் படகுகளில் காஸ் சிலிண்டர்கள் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடலில் மாசு
கேரள அரசின் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் சார்பில், கேரள மாநில கடற்கரை மேம்பாட்டு கழகம் மற்றும் மத்திய மீன்வள தொழில்நுட்ப மையம் ஆகியவற்றுடன் இணைந்து, மீன்பிடி படகுகளை காஸ் சிலிண்டர் வாயிலாக இயக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடந்த சோதனை ஓட்டத்தை, மாநில மீன்வளத் துறை அமைச்சர் சஜி செரியன் ஆய்வு செய்தார். பின் அவர் கூறியதாவது: மீன்பிடி படகுகளை இயக்க, தற்போது மண்ணெண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அவற்றை விட காஸ் பயன்படுத்தினால், 55 சதவீதம் வரை எரிபொருள் மிச்சமாகும்.மேலும், திரவ எரிபொருட்களில் கசிவு மற்றும் அதன் கழிவுகளை வெளியேற்றுவதால், கடலில் மாசு ஏற்படுகிறது. கடல் வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.காஸ் பயன்படுத்துவதால் அவை தவிர்க்கப்படும். சுற்றுச்சூழல் மாசு குறையும். வேகம் அதிகரிப்புஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், மஹாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் உள்ள வனஸ் இன்ஜினீயர்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, மீன்பிடி படகுகளில் பொருத்துவதற்காக, பிரத்யேகமான சிலிண்டரை தயாரித்துள்ளது.

ஒரு சிலிண்டரில் இருந்து எத்தனை இன்ஜின்களை வேண்டுமானாலும் இயக்கலாம். திரவ எரிபொருட்களை விட, காஸ் வாயிலாக இயங்கும் இன்ஜின்களால் மீன்பிடி படகுகளின் வேகமும் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.





