இந்தியாவின் தலைசிறந்த குதிரைகள் பங்கேற்கும் மாபெரும் குதிரை ரேஸ் போட்டி 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் நாளை தொடங்கவுள்ளது.
சென்னை திருவான்மியூர் தனியார் விடுதியில் இப்போட்டியில் பங்கேற்று வெற்றிபெரும் குதிரைகளுக்கான 17 கிலோ வெள்ளியிலான பரிசு கோப்பை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப் மைதானத்தில் இந்தியாவின் தலைசிறந்த குதிரை பந்தயமாக கருதப்படும் இப்போட்டியில் இந்தியாவின் தலை சிறந்த குதிரைகள் பங்கேற்கும் மாபெரும் குதிரை பந்தயம் சனிக்கிழமை தொடங்குகிறது.
இந்த குதிரை பந்தயத்தில் சென்னை, மைசூர், கொல்கத்தா, டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் உள்ள மிகச்சிறந்த ஏற்கனவே பல போட்டிகளில் முதலாவதாக வந்து வெற்றி பெற்ற 95 குதிரைகள் ஏற்கனவே சென்னை வந்து உள்ளது.

இதனை அறிமுகம் செய்தபிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துப் பேசிய செட்டிநாடு குழுமத் தலைவரும், மெட்ராஸ் ரேஸ் கிளப் தலைவருமான ஐயப்பன், சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த குதிரை பந்தயத்தில் பங்கேற்பதற்காக சென்னை, மும்பை, கொல்கத்தா, மைசூர், டெல்லி உள்ளிட்ட ஆறு நகரங்களில் உள்ள ரேஸ் கிளப்களில் வெற்றி பெற்று தலை சிறந்த 95 குதிரைகள் சென்னை வந்துள்ளது என தெரிவித்தார். வெற்றிபெறும் குதிரைக்கு ரூ.49.50 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்தார். மொத்தமாக நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் பரிசாக வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து 60 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த குதிரை பந்தயம் இந்தாண்டு சுழற்சி முறையில் சென்னையில் நடைபெறுகிறது. இதன் பிறகு, ஆறு வருடங்கள் கழித்தே மீண்டும் சென்னையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது என செட்டிநாடு குழுமத் தலைவர் ஐயப்பன் கூறினார்.




