பங்குனி உத்திரமும்,குலதெய்வ குலசாஸ்தா கோவில் வழிபாடும் தென்மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை தென்காசி குமரி தூத்துக்குடியில் மிக பிரபலமான விழாவாக நடைபெறுவது சிறப்பாகும்.


குலம் தெரியாமல் போனாலும், குல தெய்வம் தெரியாமல் போக கூடாது. குருவை மறந்தாலும் குல தெய்வத்தை மறக்க கூடாது என்பதெல்லாம் தென்பாண்டி நாட்டின் கிராமங்களில் பேசப்படும் பழமொழிகள். இவைகள் குலதெய்வத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக அமைகின்றன. குல தெய்வங்கள் என்பவர்கள் வெறும் வாய்வழிக் கதைகளின் நாயகர்கள் அல்ல; அவர்கள் நம் முன்னோர்கள் காலம் காலமாக பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்த தெய்வங்கள்.
இந்த தெய்வங்களை வழிபட சில வழிமுறைகள் உள்ளன. இந்த கோவில்களை பெருங்கோயில்கள் போன்று நினைத்த நாளில் சென்று வழிபட வாய்ப்புகள் குறைவு. காரணம் பல குல தெய்வ கோயில்களில் நித்திய பூஜைகள் இருப்பதில்லை, கோயில்களும் மலை, ஆறு, குளம், கண்மாய், காடு போன்ற இடங்களில்தான் இருக்கும். அதற்கு சரியான போக்குவரத்து வசதி இருக்காது. இந்த குல தெய்வ வழிபாட்டை தென்பாண்டி நாடான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி பகுதிகளில் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிறப்பாக செய்கிறார்கள். இங்கு பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
பொதுவாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் என ஒரு சாஸ்தா கோவில் இருக்கும், அந்த கோவிலில் அந்த குடும்பத்தின் குலதெய்வத்திற்கும் சன்னதி இருக்கும். ஆக அன்று தங்கள் குல சாஸ்தாவையும், தங்கள் குலதெய்வத்தையும் வழிபடுவது இப்பகுதியில் கடைபிடிக்கப்பட்டு வருவது சிறப்பம்சம்.
ஹரிஹர சக்திகள் சங்கமமாகியதன் விளைவாக மஹா சாஸ்தா அவதரித்த நாளும் பங்குனி உத்திரத்திருநாள் தான். சாஸ்தா எனும் நாமத்துக்கு ஏற்ப அவருக்கு அனைத்து உலகங்களையும் காத்து ரட்சிக்கும் பொறுப்பை ஈசன் அளித்தார். ஸ்திதி – சம்ஹார மூர்த்திகளின் ஒருங்கிணைந்த சக்தியாக, உலகங்களை ஆட்சி புரியும்படி புவனேஸ்வரனாக பட்டம் சூட்டினார். இதன் பின்னர் ஐயன் சிவ சக்தியரை வலம் வந்து வணங்கி, பூலோகம் செல்ல புறப்பட்டார்.
சாஸ்தாவானவர் சிவன்-சக்தி, விஷ்ணு-மஹாலட்சுமி, பிரம்மன்-கலைவாணி என முச்சக்திகளையும் உள்ளடக்கிய மாபெரும் சக்தி வடிவமாக திகழ்கிறார். அனைத்து பூத சேனைகளும், சிவன், விஷ்ணுவின் ஏவலர்கள், இயக்கியர்கள்(மாடன்கள், மாடத்தியர்கள்) இவர்கள் எல்லோரும் சாஸ்தாவின் அன்பு கட்டளை ஏற்றே செயல்படுவார்கள். சாந்த சொரூபத்திலிருக்கும் சாஸ்தா, ஆங்கார ரூபத்தில் அய்யனார் என்று அழைக்கப்படுகிறார். சாஸ்தாவிற்கு எழுப்படும் கோவில்களில் அவருடன் பல தெய்வங்கள் நிலைபெற்றிருப்பர். சாஸ்தா தனித்து இருப்பதில்லை. அவ்வாறு இருந்தால் காவலுக்கு, சங்கிலிபூதத்தார் மற்றும் கருப்பன், கருப்பண்ணசாமி, சுடலைமாடன் ஆகியோர்களில் எவரேனும் ஒருவர் காவல்தெய்வமாக இருப்பர். ஆக பங்குனி உத்திரத்தில் குல சாஸ்தா வழிபாடு செய்வதும், குல தெய்வ வழிபாடு செய்வதும் முக்கியத்துவம் பெறுகிறது.
பங்குனி உத்திரம் சாஸ்தா வழிபாடுக்கு முந்தைய நாள் வீடு, வாசலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், தம்பதியர் முந்தைய நாள் இரவு தாம்பத்யம் வைத்திருக்கக் கூடாது. அவருக்கு தேவையான பூஜைப்பொருள்களை வீட்டில் வாங்கி வைத்து மறுநாள் கோயிலுக்கு கொண்டு செல்ல வேண்டும். கோயிலுக்கு செல்லும்போது உடன் பிறந்தவர்கள், பெற்றோரோடு செல்லவேண்டும். திருமணம் செய்து கொடுத்த பெண் பிள்ளைகள் கணவர் வீட்டு சாஸ்தா கோயிலுக்குத்தான் பாத்தியப்பட்டவர்களாவர்கள். ஆண் பிள்ளைகள், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தாலும், தாய், தந்தையினரோடுதான் செல்ல வேண்டும். மாமியார், மருமகள் உறவு சரியில்லை என்பதற்காக பெற்றோரை விட்டு விட்டு மனைவி, குழந்தைகளோடு தாய், தந்தை மற்றும் பங்காளிகளை விட்டு சென்று குலதெய்வத்தை வழிபட்டால் அதை தெய்வம் ஏற்பதில்லை. எந்த பலனும் கிடைக்காது. இதுதான் குல தெய்வ வழிபாட்டில் முக்கியமான ஒன்று. தேங்காய், பழம் கொண்ட அர்ச்சனைகளை மட்டும் குலதெய்வம் விரும்புவது இல்லை. ஒற்றுமையோடும், முழு மனதோடும் வழிபடுவதையும் தான் விரும்புகிறது.
காலையில் அந்தணரைக் கொண்டு கணபதி ஹோமம் மற்றும் விசேஷ யாகங்கள் நடைபெறும். பின்னர் மூலவர் முதல் உள்ள சகல பரிவார தெய்வங்களுக்கும் சினப்பு அபிஷேகங்கள் நடைபெறும். அதன் பின்பு உச்சிக்காலத்தில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, ஆசார படையலுடன் தீபாராதனை நடைபெறும். பின்னர் ஒவ்வொரு குடும்பமும் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். கோவில்களில் அந்த அந்த குலதெய்வங்களின் வரலாற்றை வில்லிசையாக படிப்பார்கள்.
இந்த வழிபாட்டில் கோயிலில் அடுப்பு கூட்டி சமையல் செய்து, அங்கே பந்தி பரிமாறி, குடும்பத்தினருடன் உணவு அருந்துவார்கள். இதுவே குலதெய்வ வழிபாட்டின் சிறப்பம்சம் ஆகும்.
‘குல தெய்வ சந்நதியில் குறை சொல்லி அழுதபடி, கண்ணீர் சிந்திப்பார். மறு கணமே அதற்கு தீர்வு கிடைக்கும்,’ என்பார்கள். மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட பங்குனி பவுர்ணமி அன்று வழிபடுவது மிகுந்த பலனைத்தரும் நம் குலம் சிறப்பதோடு குடும்பமும் மேன்மை பெறும். குல தெய்வங்கள் மனம் மகிழந்து நம்மை ஆசீர்வதிப்பதால், குடும்பங்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்கள், இடையூறுகளில் இருந்து காக்கப்படும்.
குல தெய்வம் என்பது ஒவ்வொரு குடும்ப வகையறாவைப் பொருத்தது. அண்ணன், தம்பி, குடும்பத்தினர் எல்லாரும், ஒற்றுமையாக நின்று படையல் போட்டு வழிபாடு செய்யும்போது குல தெய்வங்கள் மட்டுமன்றி மறைந்த மூதாதையர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் பித்ருக்களின் பரிபூரண ஆசிகள் எளிதாக வந்து சேரும்.
குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்து கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்றும் செய்து விடமுடியாது. அல்லது வரும் வினைகள் யாவுமே நல்வினையாக மாறும். குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. குல தெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் எப்படிப்பட்ட மகானை வைத்து வழிபட்டாலும் அந்த வீட்டில் விமோசனம் கிடைப்பதில்லை என்பார்கள். பாரம்பரிய வழக்கத்தை மீறாமல், மாற்றாமல் வணங்கவேண்டியது நம் கடமை.
தென்பாண்டி மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி தற்போது பிரிக்கப்பட்ட தென்காசி, நாஞ்சில் நாடான கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் எண்ணற்ற சாஸ்தா கோவில்கள் அமையப்பெற்றுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்திற்கு பங்குனி உத்திரம் அன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறையே அளிக்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு.
இங்கு பல சாஸ்தா கோவில்கள் இருந்தாலும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காரையார் சொரிமுத்தையனார் கோவில், சித்தூர் தென்கரை மகாராஜா கோவில், பாடகப்பிள்ளையார் கோவில், மறுகால்தலை கோவில், பிராஞ்சேரி கோவில் ஆகியவைகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் தேரிக்குடியிருப்பு கற்குவேல் ஐயனார் கோவில், பூலுடையார் சாஸ்தா கோவில், குன்றுமேல்ஐயன் சாஸ்தா கோவில் ஆகியவை பிரசித்தி பெற்றதாகும்.
இதில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம்-காரையார் சொரிமுத்து ஐயனார் கோவில் சாஸ்தா கோவிலுக்கு எல்லாம் தலைமை பீடமாக விளங்குகிறது. இங்குள்ள சாஸ்தாவான சொரிமுத்தையனாரை, அகத்திய முனிவர் வழிபட்டதாக வரலாறு கூறுகிறது, இங்கு சொரிமுத்தையனாருக்கு காவல்தெய்வமாக சங்கிலிபூதத்தாரும் அருகே எழுந்தருளி உள்ளார். குலதெய்வம் மற்றும் குலசாஸ்தா கோவில் அறியாதவர்கள், இங்கு வந்து வழிபாடு செய்யலாம்.
இந்த வருடம் வரும் மார்ச்18 வெள்ளிக்கிழமை அன்று பங்குனி உத்திர விழா வருகிறது.
அனைவரும் தங்கள் குலசாஸ்தா மற்றும் குலதெய்வங்களை வழிபட்டு, நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று குலம் விளங்கப்பெறுவீர்கள் என்று புராண ஐதீகம். கூறுகிறது.




