தெலங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் பூகுடா பகுதியில் மரக்கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இன்று 11 கூலித் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பூகுடா பகுதியில் மரம் மற்றும் பழைய பொருட்கள் சேகரித்து வைக்கும் கிடங்கு செயல்பட்டு வந்தது. கூலித் தொழிலாளர்கள் பலர் கிடங்கிலேயே தங்கி பணிபுரிந்து வந்தனர். நேற்று இரவு வழக்கம் போல பணிகளை முடித்து குடோனில் அவர்கள் தங்கி இருந்த நிலையில், திடீரென்று இன்று அதிகாலை 3 மணி அளவில் கிடங்கில் தீப்பற்றியது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ பிற இடங்களுக்கு மளமளவென பரவியது.
கிடங்கியில் வாசல் வரை தீ பரவி விட்டதால் தொழிலாளர்களால் அங்கு இருந்து வெளியேற முடியவில்லை. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நெருப்பில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை மீட்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஒருவரை மட்டுமே அவர்களால் காயங்களுடன் மீட்க முடிந்தது. எஞ்சிய 11 பேரும் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துவிட்டனர். சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு கிடங்கில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது. இதையடுத்து உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள் அவற்றை அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்த கூலி தொழிலாளர்கள் அனைவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில்
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



காவல்துறையினர் இந்த தீ விபத்திற்கான காரணம் பற்றி இன்று தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
குடோனில் ஏற்பட்ட மின்கசிவே இந்த தீ விபத்து ஏற்பட காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



