திருவண்ணாமலை அருகே, அரசு பள்ளி மாணவர்கள் சிலர், போதையில் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தில், மாணவர்களுக்கு போதை பொருள் வினியோகித்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை அடுத்த மல்லவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இருதரப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.இதைப்பார்த்த ஆசிரியர்கள், ரகளையில் ஈடுபட்டவர்களை கண்டித்தபோது, அவர்கள் ஆசிரியர்களிடமும் ரகளையில் ஈடுபட்டு, தலைமை ஆசிரியர் அறையில் இருந்த பொருட்களை சூறையாடினர்.
திருவண்ணாமலை தாலுகா போலீசார் நடத்திய விசாரணையில், மூன்று மாணவர்கள் போதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து, மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்த, அதே பகுதியைச் சேர்ந்த ராமராஜன், 30, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுனில், போதை மாத்திரைகளை வாலிபர்கள் அதிகம் பயன்படுத்துவதாக புகார் வந்தது. அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்திய போது, ஆரணி பெரியார் நகரைச் சேர்ந்த நான்கு பேரை பிடித்து விசாரித்ததில், அவர்களிடம் போதை மாத்திரைகள் இருந்தன. அவர்களுக்கு மாத்திரை விற்ற, ஆரணி, பையூர் கூட்ரோட்டிலுள்ள மருந்துக்கடை உரிமையாளர் விஜயகுமாரிடம் விசாரித்தனர். மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரை விற்றதாக அந்த கடைக்கு வருவாய்த் துறையினர் ‘சீல்’ வைத்தனர்.
மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் 340 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தியதாக கூடல்நகரை சேர்ந்த தெய்வம், காளப்பன்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார், கம்மாளப்பட்டியை சேர்ந்த ரமேஷ், மதுரையை சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.






