கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி கோவில் மீனபரணி தூக்கத் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி விழாவை துவக்கி வைக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்வான நேர்ச்சை தூக்கம் ஏப்ரல் 4-ந்தேதி நடைபெறுகிறது.
கொல்லங்கோடு பத்ர காளி அம்மனுக்கு வட்ட விளையில் பிரதான கோவிலும், வெங்கஞ்சியில் தூக்க நேர்ச்சை நடைபெறும் கோவிலும் என இரண்டு கோவில்கள் உள்ளன. விழாவின் முதல்நாள் காலை 5.30 மணிக்கு பிரதான கோவிலிலும், காலை 6 மணிக்கு வெங் கஞ்சி கோவிலிலும் மகா கணபதி ஹோமம் நடைபெறுகிறது.
தொடர்ந்து அன்றைய தினம் காலை 7 மணிக்கு கொடிமரம் மேளதாளங்களுடன் வெங்கஞ்சி கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது. காலை 8.30 மணிக்கு அம்மன் சாஸ்தாநகர், திருமன்னம் சந்திப்பு பகுதிகளில் எழுந்தருளி பூஜைகளுக்குப் பின் பிரதான கோவிலுக்கு வந்தடைகிறார். தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு அம்மன் வெங்கஞ்சி திருவிழா கோவிலுக்கு எழுந்தருளுகிறார். இரவு 7 மணிக்கு தேவஸ்தான தந்திரி பிரம்மஸ்ரீ கொட்டாரக்கரை நீலமனை ஈஸ்வரன் போற்றி தலைமையில் திருக்கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்றைய தினம் இரவு 8 மணிக்கு தூக்கத் திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது. விழாவுக்கு தேவஸ்தான தலைவர் வி. ராமச்சந்திரன் நாயர் தலைமை வகிக்கிறார். செயலர் வி. மோகன்குமார் வரவேற்றுப் பேசுகிறார். தமிழக கவர்னர் ஆர்.என். ரவி விழாவை துவக்கி வைக்கிறார். மத்திய மந்திரி எல். முருகன், கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், எம்.ஆர். காந்தி ஆகியோர் பங்கேற்கின்றனர் .
4-ம்நாள் விழாவில் காலை 8.30 மணி முதல் தூக்க நேர்ச்சை குலுக்கல் மற்றும் காப்புக்கட்டு நடைபெறுகிறது. 6-ம் நாள் விழாவில் (மார்ச் 31) இரவு 7 மணிக்கு நடைபெறும் பண்பாட்டு மாநாட்டை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைக்கிறார். 9-ம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு வண்டியோட்டம் எனப்படும் தூக்கவில்லின் வெள்ளோட்டம் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான நேர்ச்சை தூக்கம் விழாவின் 10-வது நாளான ஏப்ரல் 4-ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு பள்ளியுணர்த்தல், 4.30 மணிக்கு தூக்ககாரர்களின் முட்டுக்குத்தி
நமஸ்காரம் நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு அம்மன் பச்சைப் பந்தலில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து காலை 6.30 மணிக்கு தூக்க நேர்ச்சை தொடங்கி நடைபெறுகிறது.
தூக்க நேர்ச்சை நிறைவு பெற்றபின் வில்லின் மூட்டில் குருதி தர்ப்பணத்துடன் விழா நிறைவடைகிறது. இவ்விழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளத்திலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள்.
விழா ஏற்பாடுகளை தேவஸ்தான தலைவர் வி. ராமச்சந்திரன் நாயர்,மற்றும் நிர்வாக குழு செய்துள்ளனர்.
விழாவில் கலந்து கொள்வதற்காக கவர்னர் ஆர்.என். ரவி சென்னையில் இருந்து விமானம் மூலமாக நாளை காலை தூத்துக்குடி வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக 1.15 மணிக்கு நாகர்கோவில் சுற்றுலா மாளிகை வந்து சேருகிறார்.
இங்கிருந்து 6.45 மணிக்கு கொல்லங்கோடு கோவிலுக்கு புறப்பட்டு செல்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் கொடியேற்று விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இரவு நாகர்கோவில் சுற்றுலா மாளிகையில் கவர்னர் ஆர்.என். ரவி தங்குகிறார். பின்னர் நாளை மறுநாள் (27-ந்தேதி) தூத்துக்குடி சென்று சென்னை செல்கிறார். கவர்னர் வருகையையடுத்து குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.






