rn ravi 1 - 2026

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பாரதி வரிகளை மேற்கோள் காட்டி பேசிய ஆளுநர்!

சற்றுமுன் அடடே... அப்படியா? தமிழகம்
rn ravi 1 - 2026

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் மீனபரணி தூக்கத்திருவிழா நேற்று இரவு 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உற்சவத்துக்காக மூலக்கோயிலில் இருந்து அம்மன் திருவிழா கோயிலுக்கு எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து வான வேடிக்கையுடன் கோயில் தந்திரி கொட்டராக்கரை நீலமனை ஈஸ்வரன் திருக்கொடியை ஏற்றிவைத்தார்.

இந்த நிகழ்வின் போது கோயிலைச் சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று `அம்மே நாராயணா… தேவி நாராயணா’ என கோஷம் எழுப்பினர்.

ravi rn - 2026

கொல்லங்கோடு தூக்கத்திருவிழா துவக்க நிகழ்ச்சி தொடக்க விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

ஆளுநர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தபின்பு தமிழில் வணக்கம் சொல்லி பேசுகையில், “நான் தமிழ் கற்று வருகிறேன். கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் பேசி வருகிறேன்.

இந்த ஆலயத்துக்கு வந்ததை மிகவும் மகிழ்ச்சியாக உணருகிறேன். இங்கு சாதி, மத வேறுபாடு கிடையாது. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடு கிடையாது. அனைவரும் ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்த ஆலயத்தில் வழிபடும் பத்ரகாளி அம்மனை இந்தியா முழுவதும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மாநிலங்களிலும் அவர்களது மொழிகளில் மக்கள் வழிபடுகிறார்கள்.

தெய்வம் என்பது ஒன்றுதான், பக்தி என்பதும் ஒன்றுதான். அதைத்தான் பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மகாகவி பாரதியார், `செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ என கவிதை பாடினார்.

rn ravi - 2026

ஒருவரது சிந்தனை மதம், எண்ணம், மொழி ஆகியவை வெவ்வேறாக இருந்தாலும் அனைவரும் ஒரு குடும்பமாக வாழுவது என்னை வியப்படைய செய்துள்ளது.

இந்தக் கோயிலுக்கு வந்திருக்கின்ற எழுச்சிமிகு இளைஞர்களையும், இளம்பெண்களையும் பார்க்கும் போது 2045-க்குள் கண்டிப்பாக இந்தியா ஒரு வல்லரசு நாடாக மாறும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

இந்த கோயில் அனைத்து கோயில்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது இந்த கோயில் அம்மனின் அருள் அனைவருக்கும் உரித்தாகட்டும்” என்றார்.

இந்த கோயில் விழாவின் முக்கிய நிகழ்வான பச்சிளம் குழந்தைகளின் தூக்கத்திருவிழா வருகிற 4-ம் தேதி நடக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.