ஆசைக்கு இணங்க மறுத்த தம்பி மனைவியை குழந்தையுடன் கொலை செய்தவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பெரியமலையூர் வலையில் ஆசைக்கு இணங்க மறுத்த தம்பி மனைவி அஞ்சலையை 22, மகள் மலர்விழியுடன் 2, எரித்துக்கொலை செய்த கருப்பையாவை 28, போலீசார் கைது செய்தனர்.
வலசை சிவக்குமார் மனைவி அஞ்சலை. இவரது மகள் மலர்விழி. நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் அஞ்சலை மகளுடன் மலைப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றார். அங்கு சென்ற கணவரின் அண்ணன் கருப்பையா, அஞ்சலையை ஆசைக்கு இணங்க வற்புறுத்தினார். மறுத்ததால் ஆத்திரமுற்ற கருப்பையா அஞ்சலையையும், மலர் விழியையும் கத்தியால் குத்தியுள்ளார். பின் இருவரையும் தீ வைத்து எரித்து கொலை செய்து விட்டு தப்பினார்.
இருவரும் மாலை வரை வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடினர். இருவரும் எரிந்த நிலையில் கிடந்தது குறித்து போலீசாரிடம் தெரிவித்தனர். எஸ்.பி., ஸ்ரீனிவாசன் விசாரித்தார். இக்கொலையில் கருப்பையா ஈடுபட்டது தெரிந்தது.போலீசார் அவரை கைது செய்தனர்.
#பிராட்வேயில், தண்ணீர் பந்தல் அமைத்தது, சுவர் பிரச்னை தொடர்பாக, தி.மு.க., பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
சென்னை தண்டையார்பேட்டை, அப்பாசாமி தெருவைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன்(57)தி.மு.க.பிரமுகர். கரும்பு சாறு கடை நடத்தி வந்தார்.பிராட்வே பேருந்து நிறுத்தம் பகுதியில், தி.மு.க. சார்பில், கோடைக்கால தண்ணீர் பந்தல் திறக்க, நேற்று தண்ணீர் கேன்கள் கொண்டு வந்து, பந்தல் அருகே வைத்தார்.
அப்போது, இரு ‘பைக்’குகளில் வந்த நான்கு மர்ம நபர்கள், சவுந்தரராஜனிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, அங்கிருந்தோர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே சவுந்தரராஜன் உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த எஸ்பிளனேடு போலீசார், உடலை கைப்பற்றி, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.கொல்லப்பட்ட சவுந்தரராஜன், அ.தி.மு.க.,வில் வட்ட செயலராக இருந்தவர். கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு, தி.மு.க.,வில் சேர்ந்தார்.அ.தி.மு.க.,வில் இருந்த போது, தற்போது தண்ணீர் பந்தல் அமைத்த இடத்தில், கட்சி சார்பில் சுவர் விளம்பரம் செய்வது வழக்கம்.தி.மு.க.,வுக்கு வந்ததும், சவுந்தரராஜன் அந்த சுவரை, அ.தி.மு.க.,விற்கு விடவில்லை. இதனால், இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டு, கடந்த வாரம் எஸ்பிளனேடு போலீசார், இரு தரப்பையும் அழைத்து சமரசம் பேசி அனுப்பினர்.
இந்நிலையில், நேற்று சவுந்தரராஜன் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதனால், முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா என போலீசார் விசாரிக்கின்றனர்
#கோவையில் திருமணமாகி 3 மாதங்களே ஆன நிலையில், மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.கோவை சுந்தராபுரம், காமராஜர் நகரை சேர்ந்தவர் நாகார்ஜூன் (30). ஆட்டோ டிரைவரான இவரும், அன்னை இந்திரா நகரை சேர்ந்த ஷர்மிளா (27) என்பவரும் காதலித்து, பெற்றோர் எதிர்ப்பையும் மீறி, மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
நண்பர்கள் உதவியுடன் காந்திநகர் மூன்றாவது வீதியில், வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.ஷர்மிளா, சில நாட்களாக அடிக்கடி மொபைல் போனில் பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. குடிப்பழக்கம் கொண்ட நாகார்ஜூனுக்கு இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால், இவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில், நேற்று மதியம் மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த நாகார்ஜூன் குடிபோதையில் ஷர்மிளாவை கத்தியால் குத்தியதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். பின், எல்.ஐ.சி., பகுதி டாஸ்மாக்கில் நண்பர்களுடன் மது அருந்திய போது, மனைவியை கொன்ற விஷயத்தை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள், போத்தனுார் போலீசில் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் சடலத்தை மீட்டு, நாகார்ஜூனை கைது செய்து விசாரிக்கின்றனர்.





